மகளிர் உரிமைத்தொகை; தகுதி வாய்ந்த பயனாளிகள் ஒருவரும் விடுபடக் கூடாது என்று சுற்றுலா பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன் கூறினார்.
திருச்சி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்துவது குறித்து அரசுத்துறை உயர் அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் சுற்றுலா பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் மாவட்டகண்காணிப்பு அலுவலர் டாக்டர்.க.மணிவாசன் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் முன்னிலையில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சுற்றுலா பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர்.க.மணிவாசன் பேசியதாவது; “திருச்சி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.
முதல் கட்ட விண்ணப்பப்பதிவு முகாம் 24.07.2023 முதல் 04.08.2023 வரையிலும், இரண்டாம் கட்ட முகாம் 05.08.2023 முதல் 16.08.2023 வரையிலும் நடைபெறவுள்ளது. நியாயவிலைக் கடைப்பணியாளர்கள் ஒவ்வொரு நியாயவிலைக்கடைப் பகுதியிலும் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றைக் குறிப்பிடவேண்டும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவை வீட்டில் நேரடியாக வழங்கப்பட வேண்டும்.
முகாம் நடைபெறும் நான்கு நாட்களுக்கு முன்பாகவே அப்பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் வழங்கும் பணியை மேற்கொள்ளவேண்டும். மேலும் குடும்பத்தலைவி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரடியாக விண்ணப்பப் பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் எடுத்து வரும் வகையில் பணிகளை மேற்கொள்ளவேண்டும்.
மேலும், விண்ணப்பம் பதிவு செய்யும் பொழுது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண இரசீது, வங்கி பாஸ்புத்தகம் ஆகியவற்றை எடுத்து வரவேண்டும் என பொதுமக்களுக்கு தெரிவிக்கவேண்டும்.
விண்ணப்பப் பதிவுமுகாமில் ஒரே நேரத்தில் பலர் கூட்டமாகக் கூடுவதை தவிர்க்கும் வகையில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளவேண்டும். விண்ணப்பம் அளிக்கும் அனைத்து நபர்களின் விண்ணப்பங்களும் பதிவு செய்யப்பட வேண்டும். விண்ணப்பபதிவு ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து முகாம் நாட்களிலும், காலை 9.30 மணிமுதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணிமுதல் 5:30 மணி வரையும் நடத்த வேண்டும்.
முகாம் நடைபெறும் குடியிருப்புகள், தெருக்கள், வார்டு மற்றும் அவற்றுக்கான நாட்கள் குறித்த விவரங்கள் நியாயவிலைக் கடைகளில் தகவல் பலகையாக வைக்கவேண்டும். விண்ணப்பப் பதிவு முகாமிற்கு வருகை புரியும் விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் பதியப்பட்டு, அவர்களின் விரல் ரேகை பயோமெட்ரிக் கருவி மூலம் சரிபார்க்கும் நிகழ்வில் பயனாளிகளின் விரல் ரேகைப் பதிவு சரியாக அமையவில்லை எனில், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி வழியாக ஒருமுறை கடவுச்சொல் (ழுவுP)பெறப்பட்டு பதிவு செய்யவேண்டும்.
எனவே, விண்ணப்பதாரரின் ஆதார் அட்டையுடன் தொலைபேசி இணைக்கப்பட்டு இருந்தால், அந்த கைபேசியை முகாமிற்கு எடுத்து வருவது விண்ணப்பப் பதிவை எளிமைப்படுத்தும் என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துதல் அவசியமாகும்.
மேலும், தகுதி வாய்ந்த பயனாளிகள் ஒருவரும் விடுபடாமல் பணிகள் மேற்கொள்ளவேண்டும் எனத்தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக நடைபெற்று வரும் பயிற்சி முகாமினை நேரில் பார்வையிட்டு, முகாமில் கலந்து கொண்டுள்ள அலுவலர்களிடம் சிறப்பான முறையில் பணியாற்றிட ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும், இலால்குடி வட்டம், நெருஞ்சலக்குடி பகுதியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருவதையும் நேரில் பார்வையிட்டு, விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார்.
பின்னர், வாளாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பூர்த்தி செய்யப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பங்களை பெறுவதற்காக அமைக்கப்பட்டுள்ள முகாமினை பார்வையிட்டு, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அளிக்க வரும் பொதுமக்கள் எவ்வித சிரமமின்றி விண்ணப்பிக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆலோசனைகளை வழங்கினார்.
இந்நிகழ்வுகளில் திருச்சி மாநகர காவல் ஆணையர் எம்.சத்தியப்பிரியா, மாநகராட்சி ஆணையர் டாக்டர்.ஆர்.வைத்திநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தேவநாதன், இலால்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்ரமணியன், வட்டாட்சியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி: க. சண்முகவடிவேல்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”