பட்டியல் இனத்தவருக்கான இடஒதுக்கீட்டில் அருந்ததியர் சமூகத்திற்கான 3% உள் ஒதுக்கீட்டை எதிர்த்து புதிய தமிழக கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் சென்னையில் பேரணி நடைபெற இருந்த நிலையில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். மேலும், புதிய தமிழகம் கட்சித் தொண்டர்களைக் காவல்துறையைக் கண்டித்து டாக்டர் கிருஷ்ணசாமி கொட்டும் மழையில் சாலையில் படுத்து போராட்டம் நடத்தினார். இதனால், காவல்துறையினர் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் அவரது மகன் ஷியாம் உள்ளிட்டோரைக் கைது செய்தனர்.
தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தவருக்கான 18% இடஒதுக்கீட்டில் அருந்ததியர் சமூகத்திற்கான 3% உள் ஒதுக்கீட்டால் பட்டியல் இனத்தில் உள்ள தேவேந்திரகுல வேளாளர் மற்றும் ஆதி திராவிடர் (பறையர்) சமூக மக்கள் அரசு கல்வி வேலைவாய்ப்பில் பாதிக்கப்படுவதாகவும் அதனால், அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து ஆளுநர் மாளிகையை நோக்கி புதிய தமிழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பட்டியல் இனத்தவருக்கான 18% இடஒதுக்கீட்டில் அருந்ததியர் சமூகத்திற்கான 3% உள் ஒதுக்கீட்டை எதிர்த்து டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் 500-க்கும் மேற்பட்ட புதிய தமிழகம் கட்சித் தொண்டர்கள் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக செல்ல சென்னை எழும்பூரில் வியாழக்கிழமை (நவம்பர் 7) திரண்டனர்.
அப்போது, அருந்ததியர் சமூகத்திற்கான 3% உள் ஒதுக்கீட்டை எதிர்த்து பேரணியாக செல்ல முயன்ற புதிய தமிழகம் கட்சித் தொண்டர்களைத் தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அவர்களைக் கைது செய்தனர். இதனால், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தனது கட்சித் தொண்டர்களைக் கைது செய்ததைக் கண்டித்தும், 3% அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை எதிர்த்தும் கொட்டும் மழையில் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, டாக்டர் கிருஷ்ணசாமி, அவரது மகன் ஷியாம் மற்றும் புதிய தமிழகம் கட்சித் தொண்டர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால், எழும்பூரில் பரபரப்பு நிலவியது.