Muthulakshmi reddi birthday: இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் 133வது பிறந்தநாளையொட்டி, அவரை கவுரவிக்கும் வகையில், கூகுள் தனது இணையதள முகப்பு பக்கத்தில் டூடுல் வெளியிட்டு கவுரவப்படுத்தியுள்ளது.
மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த முதல் மாணவி, அரசு மருத்துவமனையில் பணி செய்த முதல் பெண் மருத்துவர், பிரிட்டிஷ் இந்தியாவில் முதல் சட்டப்பேரவை உறுப்பினர் இப்படி வரலாற்றில் பல முதன்முதல் சாதனைகளுக்கு சொந்தக்காரர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஆவார். அவருடைய 133வது பிறந்த தினமான இன்று கூகுள் தனது முகப்பு பக்கத்தில் அவருடைய ஓவியத்தை டூடுல் போட்டு கௌரவித்துள்ளது.
இந்தியாவின் முதல் சட்டப்பேரவை உறுப்பினரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தமிழ்நாட்டில் 1883 ஆம் ஆண்டு இதே நாளில் பிறந்தார். அவருடைய 133வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கல்வியாளராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் மருத்துவராகவும் சமூக சீர்த்திருத்தவாதியாகவும் போற்றப்படுகிறார்.
டாக்டர் முத்துலட்சுமியின் பிறந்ததினம் – மருத்துவமனை தினம் : தமிழக அரசு அறிவிப்பு
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திருமணம் செய்துகொள்ள மறுத்து மகாராஜா கல்லூரியில் படித்தார். பின்னர், மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் முதல் மாணவியாக சேர்ந்து மருத்துவம் படித்தார். இதையடுத்து, அவர் மெட்ராஸ் மாகாண சட்டப்பேரவையில் உறுப்பினராவதற்கு மருத்துவர் பயிற்சியைக் கைவிட்டார். டாகடர் முத்துலட்சுமி ரெட்டி பெண்களின் உரிமைக்காக போராடினார். குழந்தை திருமணங்கள் மலிந்திருந்த காலத்தில் பெண்களுக்கு சட்டப்பூர்மான திருமண வயதை உயர்த்த வேண்டும் என்று குரல் எழுப்பினார். அவர் பெண் குழந்தைகள் சுரண்டுப்படுவதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என விரும்பினார். தேவதாசி முறையை ஒழிக்க சட்டப்பேரவையில் குரல் கொடுத்தார்.

இதுமட்டுமல்லாமல், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தனது சகோதரி புற்றுநோய் காரணமாக இறந்தபின், 1954 ஆம் ஆண்டு அடையார் புற்றுநோய் நிறுவனத்தை நிறுவினார். அதற்காக அவர் இன்றளவும் நினைவு கூறப்படுகிறார். இந்த நிறுவனம் தற்போது உலக அளவில் குறிப்பிடத்தக்க சிறந்த புற்றுநொய் மருத்துவ மையமாக விளங்குகிறது. இந்த மருத்துவமனையில் ஆண்டுக்கு 80,000 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1956 ஆம் ஆண்டு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கு இந்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவித்தது. தமிழக அரசும் இவருடைய பணிகளை போற்றும் விதமாக, தமிழக அரசின் மகப்பேறு நிதியுதவி திட்டத்துக்கு டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவி திட்டம் என்று பெயர் சூட்டியுள்ளது. இப்படி பல சாதனைகளுக்கும் கௌரவங்களுக்குக்கும் சொந்தக்காரரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் 133வது பிறந்த நாளான இன்று கூகுள் நிறுவனம் தனது முகப்பு பக்கத்தில் அவருடைய ஓவியத்தை டூடுல் போட்டு கௌரவித்துள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த ஓவியர் அர்ச்சனா சீனிவாசன் வரைந்துள்ள அந்த ஓவியத்தைப் பற்றி கூகுள் குறிப்பிடுகையில், “டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தனது வாழ்நாள் முழுவதும் பல தடைகளை உடைத்து பொது சுகாதாரத்துக்காகவும், பாலின பாகுபாடுக்கு எதிரான போராட்டத்திலும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். அவர் எண்ணற்ற மக்களின் வாழ்க்கையை குறிப்பாக இளம் சிறுமிகளின் வாழ்க்கையை மாற்றியமைத்து ஒரு புதிய பாதை வகுப்பவராக இருந்தார்” என்று புகழாரம் சூட்டியுள்ளது.