இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு என்பது மக்களை ஏமாற்றும் வேலை. வன்னியர்களுக்கு 3% மட்டுமே கிடைக்கும்; அதிமுக, திமுக, பாமக கட்சிகள் வன்னியர்கள் உள் ஒதுக்கீடு என்று வன்னியர்களை ஏமாற்றுக்கிறார்கள் என்று விஞ்ஞானி டாக்டர் வி. பொன்ராஜ் கூறியிருப்பது தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கக் கோரி பாமக நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, முந்தைய அதிமுக ஆட்சியின் இறுதிக் கட்டத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கான 20% இடஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு அளித்து சட்டத்தை நிறைவேற்றியது. அப்போதே, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள சீர்மரபினர் உள்ளிட்ட சாதிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
தமிழ்நாட்டில் அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீழு வழங்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில், வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.% உள் ஒதுக்கீட்டை ரத்து செய்தது. ஆனால், தமிழகத்தில் ஆளும் திமுக அரசும் பாமகவும் வன்னியர்களின் உள் ஒதுக்கீட்டை உறுதி செய்வோம் என்று தெரிவித்துள்ளன.
இந்த நிலையில்தான், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் டாக்டர் வி. பொன்ராஜ், செய்தித் தொலைக்காட்சியில் வன்னியர்கள் இடஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் தெரிவித்த கருத்து தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் தொலைக்காட்சியில் வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக நடந்த விவாதத்தில் கலந்துகொண்ட டாக்டர் வி. பொன்ராஜ் கூறியதாவது: “உள் ஒதுக்கீடு என்பது ஒரு ஏமாற்று வேலை. உள் ஒதுக்கீடு என்பது அநீதி. உள் ஒதுக்கீடு பெறக்கூடிய ஜாதிக்கோ சமுதாயத்துக்கோ நன்மை கிடைக்காது. உள் ஒதுக்கீடு மூலமாக அவர்கள் எந்த நன்மையையும் அனுபவிக்க முடியாது.
இடஒதுக்கீடு தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மொத்தம் 69 சதவீதம் இடஒதுக்கீடு அதில், 30 சதவீதம் பிற்படுத்தப்பட்டோருக்கும் 20 சதவீதம் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும் 18 சதவீதம் பட்டியல் பிரிவினருக்கும் 1 சதவீதம் பழங்குடியினருக்கும் வழங்கப்படுகிறது.
இதில் ஏற்கெனவே அருந்ததியர்களுக்கு கொடுத்த உள் ஒதுக்கீடாக இருக்கட்டும், முஸ்லிம்களுக்கு கொடுத்த உள் ஒதுக்கீடாக இருக்கட்டும், இதனால், அருந்ததியர்களுக்கும் பலன் கிடையாது. முஸ்லிம்களுக்கும் பலன் கிடையாது.
உதாரணத்துக்கு வன்னியர் சாதி எடுத்துக்கொள்ளுங்கள். மாநிலத்தில் 100 சதவீதம் மக்கள் தொகை 8 கோடி மக்கள் அதில், 12% - 15% வன்னியர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். இவர்கள் எம்.பி.சி பிரிவில் வருகிறார்கள். எம்.பி.சி பிரிவுக்கு 20% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மொத்த மக்கள் தொகை 100 சதவீதத்தில் 15% வன்னியர்கள் இருக்கிறார்கள் என்றால், 20% இட ஒதுக்கீட்டில் அவர்களுக்கு 3 சதவீதம் தான் ஒதுக்கி இருக்க வேண்டும். இவர்கள் 10.5% என்று எப்படி தவறான கணக்கு போட்டார்கள் இது தவறான கணக்கு. 10.5% உள் டொதுக்கீடு கொடுத்ததெ தவறு. 3% கொடுத்தீர்கள் என்றால், 100 காலி இடங்களில் 30 இடங்கள் பி.சி-க்கு போய்விடும். 20 இடங்கள் எம்.பி.சிக்கு போய்விடும். 18 இடங்கள் எஸ்.சி-க்கு போய்விடும். 2 இடங்கள் எஸ்.டி-க்கு போய்விடும். அப்போது இந்த 20 காலி இடங்களில் 3 சதவீதம் கொடுத்தால், எவ்வளவு கிடைக்கும் என்றால் .6% தான் கிடைக்கும். முக்குலத்தோர் கள்ளர், மறவர், அகமுடையாருக்கு .4% தான் கிடைக்கும். உள் ஒதுக்கீடு என்று போகப்போக யாருக்கும் எந்த பலனும் கிடைக்காது. வன்னியர்களுக்கு 10.5% எப்படி உள் ஒதுக்கீடு வரையறை செய்தார்கள் என்று அந்த கணக்கு எனக்கு புரியவில்லை.
எம்.பி.சி-யில் விளிம்புநிலையில் உள்ள 115 சமூகங்களுக்கு இடமே கிடைக்காது. 115 சமூகங்களுக்கு உள் ஒதுக்கீட்டின் காரணமாக எந்த பலனும் கிடைக்காது. எம்.பி.சி-க்கு 20% இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடும், கள்ளர், மறவர், அகமுடையாருக்கு 7% மற்ற 100க்கும் மேற்பட்ட சமூகங்களுக்கு 2.5% உள் ஒதுக்கீடு வழங்குவதா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அரசியலமைப்புச் சட்டம் ஆர்ட்டிகிள் 14, அனைவருக்கும் சம வாய்ப்பு அடிப்படையில், இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. அதே போல,
ஆர்ட்டிகிள் 15ன் படி, மதம், சாதி, பிறப்பு, பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று கூறியிருக்கிறார்கள்.
அப்போது என்ன அர்த்தத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி 10.5% உள் ஒதுக்கீட்டை அமல்படுத்தியது. அப்படியே கொடுத்திருந்தாலும் வன்னியர்களுக்கு 3% உள் ஒதுக்கீடுதான் கொடுத்திருக்க வேண்டும். அதனால், அதை ஏற்றுக்கொண்டு திமுக அரசு எப்படி மேல்முறையீடு போனது.
சமூகநீதி என்பது யாருக்கு வேண்டும் என்றால் சமூகத்தில், பின்தங்கிய நிலையில் இருக்கக்கூடிய சமூகத்திற்கு அளிக்கக்கூடிய இடஒதுக்கீடுதான் சமூகநீதி. கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இந்த இடஒதுக்கீடு கொண்டுவந்ததற்கான காரணமே அதுதான். இதை சரியாக செயல்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் அன்றைக்கு எம்.ஜி.ஆர் 50% இடஒதுக்கீடு ஏற்படுத்தினார். கலைஞர் 20% எம்.பி.சி-க்கு ஒதுக்கினார். ஜெயலலிதா 69% இடஒதுக்கிட்டை இடம்பெற வைத்தார்கள். 100 சதவீதம் இடஒதுக்கீடு கொடுக்க முடியாது. மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில்தான் 69% இடஒதுக்கீடு அதிகமாக இருக்கிறது. நமக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அப்போது, இதை நாம் எப்படி தக்க வைத்துக்கொள்ள வேண்டும். 20% இடஒதுக்கீடுக்காக பாமக போராடியது. போராட்டத்தில் 20 பேர் இறந்தார்கள். உண்மையில் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். தியாகங்கள் மதிக்கப்பட வேண்டும். எடப்பாடி பழனிசாமி தேர்தல் அறிவிப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்னால், அறிவித்தாரோ அன்றைக்கே நான் சொன்னேன். இது தேறாது, இது நடக்காது. இது செயல்பாட்டுக்கு வராது. இது இது வன்னியர்களின் ஓட்டைப் பெறுவதற்காக செய்யப்பட்ட அதிமுகவின் ஏமாற்று வேலை. வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு என்று சொல்லை வன்னியர்களுக்கு அநீதியைத்தான் இழைத்திருக்கிறது அதிமுக. அதே மாதிரி, திமுகவும் யோசனை செய்து செய்திருக்க வேண்டும். மேல்முறையீட்டுக்கு போயிருக்கக் கூடாது.
சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து, இதில் எத்தனை பேர் பின்தங்கி இருக்கிறார்கள். மொத்தம் மக்கள் தொகை எவ்வளவு இருக்கிறது? மிகவும் பிற்படுத்தப்பட்டோரில் வன்னியர்கள் எத்தனை சதவீதம் இருக்கிறார்கள். 12-15 % இருப்பார்கள் என்று உத்தேசமாக சொல்கிறோம். அது 18%, 20% கூட இருக்கலாம். அப்போது, இவர்களுக்கு 10.5% சதவீதம் எப்படி உள் ஒதுக்கீடு செய்ய முடியும்.
2011-க்கு பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021-ல் எடுத்திருக்க வேண்டும். இவர்கள் சி.ஏ.ஏ. சட்டம், என்.ஆர்.சி சட்டம் கொண்டுவந்து அது பெரிய சர்ச்சையாகி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க முடியாமல் இருக்கிறது. அவர்களின் பொருளாதார் நிலை பற்றி கணக்கெடுப்பு எடுத்தால் தான் தெரியும்.
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்தால்தான் தெரியும். இது மத்திய அரசினுடைய பொறுப்பு. இதை அவர்கள் தட்டிக்கழிக்க முடியாது. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுப்பதற்கு காலதாமதம் செய்வதற்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால், அவர்கள் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்யாமல் தவிர்க்கிறார்கள்.
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்தாலும் கூடம், இத்தனை சதவீதம் வன்னியர்கள் இருக்கிறார்கள், இத்தனை சதவீதம் முக்குலத்தோர் இருக்கிறார்கள், இத்தனை சதவீதம் வண்ணார், குயவர், நாடார் என மற்ற சாதிகளும் இருக்கிறார்கள் என்பது தெரியவரும்.
ஆனால், நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், எம்.பி.சி-க்கு 20% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மிச்சம் இருக்கிற 116 சாதிகளில் படிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். வேலைவாய்ப்பிலும் வாய்ப்பு கிடைக்கும். அதையும் நீங்கள் குறுக்கி குறுக்கி உள் ஒதுக்கீடு என்று போனால், இது வன்னியர்களுக்கு எதிராகத்தான் அமையும். யாருக்காக உள் ஒதுக்கீடு கேட்கிறார்களோ அதை நிறைவேற்ற முடியாது. உள் ஒதுக்கீடு கேட்கிறா பாமகவால் இந்த உள் ஒதுக்கீட்டை அடைய முடியாது. அப்படியே அடைந்தால்கூட அது வன்னியர்களுக்கு எதிராகத்தான் போய் முடியுமே தவிர, அவர்களுக்கு இவர்கள் நினைக்கிற மாதிரி 10.5% கிடைக்காது. அவர்களுக்கு 3% தான் கிடைக்கும். இது கணக்கு. பாமக நாங்கள் உள் ஒதுக்கீடு வாங்கித் தந்துவிடுவோம் என்று சொல்வதெல்லாம் சுத்த ஏமாற்று வேலை. அதிமுக - திமுக - பாமக வன்னியர் பெருமக்களை ஏமாற்றுகிறார்கள். இவர்கள் ஏமாற்றி ஓட்டை மட்டும் வாங்கிக்கொண்டு அநீதி செய்கிறார்கள். அவர்கள், வன்னியர்களுக்கு மட்டும் அநீதி செய்யவில்லை. உள் ஒதுக்கீடு சட்டத்தைக் கொண்டுவந்து மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியில் விளிம்பு நிலையில் உள்ள 115 சாதிகளுக்கும் அநீதி செய்கிறார்கள். சமூகநீதிக்கு பதிலாக சமூக அநீதி செய்கிறார்கள் என்பதை வன்னிய மக்கள் உட்பட அனைத்து மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். உள் ஒதுக்கீடு என்று போனால் உங்களுக்கு கண்டிப்பாக பலன் கிடையாது என்பதை விளங்கிக்கொள்ளுங்கள். உள் ஒதுக்கீடு வாங்கித் தருவோம் என்று சொல்பவர்கள் உள் ஒதுக்கீட்டை வாங்கித் தரமாட்டார்கள். அப்படியே வாங்கித் தந்தாலும் அது வன்னிய மக்களுக்கு எதிராகத்தான் முடியப் போகிறது. இதனால், பாதிக்கப்படப்போவது 116 சாதிகளைச் சேர்ந்த விளிம்புநிலை மக்கள்தான். உள் ஒதுக்கீடு வாங்கக்கூடிய அனைத்து சமூகமும் பாதிக்கப்படும்” என்று கூறினார்.
பொன்ராஜ்ஜின் கருத்துக்கு பாமக-வைச் சேர்ந்த சூரியபிரகாஷ் கடுமையாக பதிலடி கொடுத்து வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீட்டை வழங்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்.
வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கியதை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது குறித்த விவாதத்தில் டாக்டர் வி. பொன்ராஜ் தெரிவித்த கருத்து தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொன்ராஜ்ஜின் கருத்துக்கு பாமகவினர் சமூக ஊடகங்களில் எதிர்வினையாற்றி வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.