/indian-express-tamil/media/media_files/2025/10/06/anbumani-ramadoss-2025-10-06-13-14-58.jpg)
சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள டாக்டர் ராமதாஸை அவருடைய மகன் அன்புமணி ராமதாஸ் மருத்துவமனைக்கு வந்து அவருடைய உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருடைய மகன் அன்புமணி ராமதாஸ் திங்கள்கிழமை மருத்துவமனைக்கு வந்து உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
பா.ம.க-வில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. டாக்டர் ராமதாஸ், பா.ம.க தலைவராக இருந்த அன்புமணியை அந்த பதவியில் இருந்து நீக்கி அறிவித்தார். மேலும், டாக்டர் ராமதாஸ் தானே பா.ம.க-வின் தலைவர் என்று அறிவித்தார்.
அன்புமணி தானே பா.ம.க தலைவர் என்றும் அவரை நீக்கும் அதிகாரம் ராமதாஸுக்கு இல்லை என்று கூறி தனி அணியாக செயல்பட்டு வருகிறார். இதனால், பா.ம.க தொண்டர்கள் இடையே குழப்பம் நிலவி வருகிறது.
இந்நிலையில், பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமை திடீரெனச் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு 86 வயது ஆகிறது. முதுமை காரணமாக அவ்வப்போது மருத்துவப் பரிசோதனை செய்வது வழக்கம். அந்த வகையில், டாக்டர் ராமதாஸ் இதயப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
மேலும், மருத்துவப் பரிசோதனைகள் நிறைவடைந்ததும் மருத்துவர்களின் ஆலோசனைகளுக்குப் பிறகு, அவர் மருத்துவமனையில் இருந்து திங்கள்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தகவல் வெளியானது.
இந்நிலையில், சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள டாக்டர் ராமதாஸை அவருடைய மகன் அன்புமணி ராமதாஸ் மருத்துவமனைக்கு வந்து அவருடைய உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம பேசிய பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், “டாக்டர் ராமதாசுக்கு ஆஞ்ஜியோகிராம் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை நன்றாக இருக்கிறது. பயப்படுவதற்கு எதுவுமில்லை. அவருக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று இருதய மருத்துவ நிபுணர்கள் சொல்லியிருக்கிறார்கள். மேலும், அவர் 2 நாட்கள் மருத்துவமனையில் ஓய்வெடுக்க வேண்டும். தொடர்ந்து கொடுக்கின்ற அந்த மாத்திரைகளை எடுக்க வேண்டும். மற்றபடி பயப்படுவதற்கு எதுவுமில்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
டாக்டர் ராமதாஸ் ஐ.சி.யூ-வில் (தீவிர சிகிச்சைப் பிரிவு) இருக்கிறார். அதனால், அவரைப் பார்க்க முடியவில்லை. ஒரு 6 மணி நேரம் ஐ.சி.யூ-வில் இருப்பார். அதன் பிறகு அறைக்கு வந்துவிடுவார். இருதய மருத்துவ நிபுணர்களிடம் பேசியிருக்கிறேன். அதனால், அவர் இன்னும் 2 நாட்கள் மருத்துவமனையில் ஓய்வெடுக்க வேண்டும்.” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.