Advertisment

பா.ம.க நிர்வாகிகள் 3 பேர் கொலை; கூலிப் படையை ஒழிக்க கோரி போராட்டம் - டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

கடந்த 50 நாட்களில் பா.ம.க நிர்வாகிகள் 3 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள், செங்கல்பட்டில் கூலிப்படைகளை ஒழிக்கக் கோரி செவ்வாய்க்கிழமை பா.ம.க சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என்றும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Dr Ramadoss announce protest, Dr Ramadoss protest Chengalpattu, Ramadoss demand abolish mercenary force, 3 PMK cadres murder, பா.ம.க நிர்வாகிகள் 3 பேர் கொலை, கூலிப் படையை ஒழிக்கக் கோரி போராட்டம் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு, டாக்டர் ராமதாஸ், பாமக, செங்கல்பட்டு, Dr Ramadoss protest to demand abolish mercenary force

டாக்டர் ராமதாஸ்

கடந்த 50 நாட்களில் பா.ம.க நிர்வாகிகள் 3 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள், செங்கல்பட்டில் கூலிப்படைகளை ஒழிக்கக் கோரி செவ்வாய்க்கிழமை பா.ம.க சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என்றும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisment

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “செங்கல்பட்டு மணிக்கூண்டு அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் நகர செயலாளர் பூக்கடை நாகராஜ் கூலிப்படையினரால் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், பா.ம.கவினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நிகழ்ந்துள்ள இக்கொலை அப்பகுதியில் சட்டம் & ஒழுங்கு எந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு.

செங்கல்பட்டு மணிக்கூண்டு பகுதியில் மலர் வணிகம் செய்து வந்த பூக்கடை நாகராஜ், பாட்டாளி மக்கள் கட்சியின் நகர செயலாளராக பணியாற்றி வந்தார். யாருடனும், எந்தப் பகையும் ஏற்படுத்திக் கொள்ளாத அவர், கட்சிப் பணியிலும், வணிகத்திலும் கவனம் செலுத்தி வந்தார். நேற்றிரவு வணிகத்தை முடித்து விட்டு, வீட்டுக்கு புறப்பட்ட அவரை இரு சக்கர ஊர்திகளில் வந்த 7 பேர் கொண்ட கூலிப்படை சரமாரியாக வெட்டிக் கொலை செய்திருக்கிறது. இது முழுக்க முழுக்க காவல்துறையின் தோல்வியாகும்.

பூக்கடை நாகராஜ் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் இருப்பவர்கள் கஞ்சா வணிகம் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருபவர்கள் ஆவர். அந்த கும்பலால் பொதுமக்களுக்கு, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து காவல்துறையிடம் நாகராஜ் ஏற்கனவே புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் சிலர் மீது காவல்துறையும் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், அந்தக் கும்பலின் குற்றச்செயல்களைத் தடுக்கவும், அவர்களை தொடர்ந்து கண்காணிக்கவும், பிற கூலிப்படைகளுடனான தொடர்பை துண்டிக்கவும் காவல்துறை தவறிவிட்டது. அதன் விளைவாகத் தான் ஒரு தவறும் செய்யாத நாகராஜ் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இக்கொலைக்கு காவல்துறை தான் பொறுப்பேற்க வேண்டும்.

சென்னைக்கு மிக அருகில் உள்ள பெரிய நகரம் செங்கல்பட்டு தான். தொழில், வணிகம், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்திலும் மிகுந்த முக்கியத்தும் வாய்ந்த செங்கல்பட்டு நகரமும், மாவட்டமும் தொடர்ந்து பல பத்தாண்டுகளாக கூலிப்படையினரின் கொடுங்கரங்களில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கூலிப்படையினரால் நிகழ்த்தப்படும் படுகொலைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதைத் தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

மறைமலைநகர் பகுதியில் பா.ம.க. நிர்வாகி மனோகரன், வன்னியர் சங்க மாவட்டத் தலைவர் காட்டூர் காளிதாசன், செங்கல்பட்டில் பூக்கடை நாகராஜ் என கடந்த மே 22&ஆம் நாளில் இருந்து இப்போது வரையிலான 50 நாட்களில் பா.ம.க. நிர்வாகிகள் மூவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு நீதிமன்ற வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் லோகேஷ் என்பவர் கொடூரமான முறையில் நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார். கடந்த 6 மாதங்களில் மட்டும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 20&க்கும் மேற்பட்ட படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அனைத்திலும் கூலிப்படையினர் சம்பந்தப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் கூலிப்படையினரின் கூடாரமாக மாறி வரும் நிலையில், அவர்களின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறை வேடிக்கை பார்க்கிறது.

தலைநகர் சென்னையில் தொடங்கி தமிழகம் முழுவதும் கூலிப்படை கொலைகள் அதிகரித்து விட்டன. கடலூரில் தி.மு.க சட்டப்பேரவை உறுப்பினர் பங்கேற்ற நிகழ்வில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப் பட்டிருக்கிறது. இத்தகைய குற்ற நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும் போது தமிழகத்தில் காவல்துறை செயல்படுகிறதா… இல்லையா? என்ற வினா எழுகிறது. தமிழ்நாட்டில் கூலிப்படையின் அட்டகாசங்களும், கொலைகளும் அதிகரித்து வருவதும், அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறுவதும் அத்துறையை கவனிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தான் அவப்பெயரை சேர்க்கும்.

தமிழ்நாட்டை விட கொடிய கூலிப்படையினரின் கூடாரமாக திகழ்ந்தது உத்தரப்பிரதேசம். கூலிப்படைத் தலைவர்கள் அங்கு தனி இராஜ்யம் நடத்தி வந்தனர். அதனால் மக்கள் நடமாட முடியாத நிலை இருந்து வந்தது. காவல்துறையினருக்கு சுதந்திரமும், அதிகாரமும் வழங்கப்பட்டதன் பயனாக அங்கு கூலிப்படை அட்டகாசம் முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கூலிப்படையினரை ஒழிப்பது உத்தரப்பிரதேச காவல்துறையால் சாத்தியமாகும் போது, அவர்களை விட திறமையான தமிழக காவல்துறையால் முடியாதா? சட்டம்& ஒழுங்கு சீர்குலைந்தால் மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்பதை அரசு உணர வேண்டும்.

பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளின் படுகொலையில் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் செங்கல்பட்டு மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தொடர் போராட்டங்களை நடத்தும். செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகரித்து வரும் கூலிப்படை அட்டகாசங்களை முழுமையாக ஒழிக்க அதிரடி நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொள்ள வேண்டும். உத்தரப்பிரதேசத்தில் ஒழிக்கப்பட்டதைப் போல தமிழ்நாட்டிலும் கூலிப்படையினர் ஒடுக்கப்பட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கல்பட்டு நகரம் அம்பேத்கர் சிலை அருகில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 11.07.2023 செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்கு மாபெரும் போராட்டம் நடத்தப்படும். அப் போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரான நானே தலைமையேற்கிறேன். பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அதன் துணை அமைப்புகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் கிளை அமைப்புகளின் நிர்வாகிகளும், பாட்டாளி சொந்தங்களும் போராட்டத்தில் பங்கேற்பார்கள்” என்று டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Dr Ramadoss Pmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment