பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சமூக ஊடகமான ட்விட்டரில் ஒரு வித்தியாசமான போட்டியை அறிவித்துள்ளார். அந்த போட்டியின் முடிவுகள் அக்டோபர் 28ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். டாக்டர் ராமதாஸின் வித்தியாசமான போட்டியை பற்றி நெட்டிசன்கள் பலரும் இந்த போட்டி ரொம்ப நன்றாக இருக்கிறது என்று தெரிவித்து வருகின்றனர்.
பாமகவுக்கு கடந்த 2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முதலே எந்த தேர்தலும் குறிப்பிடும்படியான வெற்றித் தேர்தல்களாக அமையவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக 5 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து வந்த, 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாமக 1 மாவட்ட கவுன்சிலர் இடங்களில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், 47 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த 9 மாவட்டங்களில் 7 மாவட்டங்கள் பாமகவின் வாக்கு வங்கியாக உள்ள வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ள மாவட்டங்கள் என்பதால் பல்வேறு கணக்குகளுடன்தான் பாமக தனித்து போட்டியிட்டது. ஆனால், பாமக எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.
தேர்தலில் வெற்றி தோல்வி என்று எது வந்தாலும் அனைத்து அரசியல் நடவடிக்கைகளிலும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கைகள் மூலம் தனது கருத்துகளை முன்வைப்பார். பிறமொழிக் சொற்கள் கலந்து தமிழ் ஊடகங்கள் இயங்கிக்கொண்டிருந்த சூழலில், தங்கள் கட்சியின் மக்கள் தொலைக்காட்சியில் பெரும்பாலும் தனித் தமிழ் சொற்களுடன் செய்திகளை வாசிக்கச் செய்வதை ஊக்குவித்தார்.
இந்த சூழ்நிலையில்தான், டாக்டர் ராமதாஸ் ஒரு வித்தியாசமான போட்டியை அறிவித்துள்ளார். அந்த வித்தியாசமான போட்டி என்னவென்றால், ராமதாஸ் தனது நண்பருடன் சமூக ஊடகமான ட்விட்டரில் உரையாடும்போது தனித் தமிழ் சொற்களில் மட்டுமே உரையாடுவது என்று சுவாரஸியமான ஒரு போட்டியை அறிவித்துள்ளார். அந்த போட்டியின் முடிவு நாளை மறுநாள் (அக்டோபர் 28) அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: “எனக்கும், எனது நண்பருக்கும் இடையே நாளை தனித்தமிழ் பயன்பாடு சார்ந்து ஓர் ஆக்கப்பூர்வ போட்டி. நானும், அவரும் நாளை முழுவதும் எத்தனை முறை பேசினாலும் ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிச் சொற்கள் கலப்பின்றி பேச வேண்டும் என்பது தான் அப்போட்டி. முடிவை நாளை மறுநாள் உங்களுக்குச் சொல்கிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
டாக்டர் ராமதாஸின் இந்த சுவாரஸியமான போட்டி அறிவிப்பை அறிந்த பாமகவினர் மற்றும் நெட்டிசன்கள், இந்த போட்டி ரொம்ப நல்லா இருக்கே, உங்களுடன் உரையாடப் போகும் அந்த நண்பர் யார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், ராமதாஸ் அறிவித்துள்ள இந்த தனித்தமிழ் உரையாடல் போட்டி பிறமொழி கலவாமல் தமிழ்மொழியில் பேசுவதை ஊக்குவிக்கும் என்று நெட்டிசன்கல் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"