பாமக.வுக்கு அன்னிய அறிவு தேவையில்லை என பிரசாந்த் கிஷோர் விவகாரத்தை சூசகமாக குறிப்பிட்டு டாக்டர் ராமதாஸ் ‘ட்வீட்’ செய்திருக்கிறார். இதன் மூலமாக டாக்டர் ராமதாஸ்- திமுக மோதல் தொடர்கிறது.
Advertisment
திமுக.வுக்கு 2021 தேர்தலில் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ‘ஐ பாக்’ அமைப்பு பணியாற்ற இருக்கிறது. இதனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிகாரபூர்வமாக நேற்று (3-ம் தேதி) தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கலவையான எதிர்வினைகள் வந்தபடி இருக்கின்றன.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், ‘எந்தத் தேர்தலாக இருந்தாலும் பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றியை தலைமையின் வழி காட்டுதலும், தொண்டர்களின் உண்மையான உழைப்பும், பாட்டாளிகளின் ஆதரவும் உறுதி செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. மக்களிடம் செல்வோம்! அவர்களுக்காக உழைப்போம்!! அவர்களால் வெல்வோம்!!!
வெற்றிடங்களைத் தான் காற்று நிரப்பும். பாட்டாளி மக்கள் கட்சி அறிவார்ந்த இளைஞர்களும், உண்மையான தொண்டர்களும் நிறைந்த கட்சி. பாட்டாளி மக்கள் கட்சியுடன் இரண்டறக் கலந்த இளைஞர்கள் இயக்கத்தில் நிறைந்துள்ள நிலையில், அந்நிய அறிவுக்கு தேவையும் இல்லை; தேடலும் இல்லை!’ எனக் கூறியிருக்கிறார்.
‘அந்நிய அறிவு பாமக.வுக்கு தேவையில்லை’ என ராமதாஸ் கூறியிருப்பது, பிரசாந்த் கிஷோர் விவகாரத்தை மனதில் வைத்தே என்பது வெளிப்படையாக தெரிகிறது. முரசொலி மூலப்பத்திரம் விவகாரத்தில் சூடு பிடித்த திமுக- பாமக மோதல் தூவானமாக இன்னும் தொடர்கிறது.