பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது தைலாபுரம் தோட்டத்தில் விளைவிக்கப்பட்டுள்ள முற்றிய பொன்னி நெற்கதிர்களை மயில்கள் கூட்டமாக வந்து சாப்பிடுவதை ஃபேஸ்புக்கில் சுவாரசியமான பதிவாக எழுதியுள்ளார்.
தமிழ்நாடு அரசியலில் எல்லா அரசியல் நிகழ்வுகளுக்கும் உடனுக்குடன் எதிர்வினையாற்றி தனது கருத்தை தெரிவிப்பவர் டாக்டர் ராமதாஸ். அவர் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் தனது தோட்டத்தில் வசித்து வருகிறார். தைலாபுரம் தோட்டத்தில் இயற்கை முறையிலான விவசாயம், பறவைகள், மரங்கள் பற்றி அவ்வப்போது ஃபேஸ்புக்கில் சுவாரசியமாக பதிவிடுவார்.
அந்த வகையில், டாக்டர் ராமதாஸ் தனது தைலாபுரம் தோட்டத்தில் விளைவிக்கப்பட்டுள்ள முற்றிய பொன்னி நெற்கதிர்களை மயில்கள் கூட்டமாக வந்து சாப்பிடுவதை ஃபேஸ்புக்கில் சுவாரசியமாக பதிவிட்டுள்ளார்.
‘மயில்களும், முறையீடும்’ என்று தலைப்பிட்டு டாக்டர் ராமதாஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “தைலாபுரம் தோட்டத்தில் எங்களின் உணவுத் தேவைக்காக பொன்னி நெல் பயிரிட்டிருக்கிறோம். முழுக்க முழுக்க இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படுகிறது. இப்போது அந்த பயிர்கள் கதிர் முற்றி அறுவடைக்கு தயாராகி விட்டன. இதை அறிந்ததும் எங்கள் நிலத்திற்கு மயிலார்கள் படையெடுத்திருக்கின்றனர். 10-க்கும் மேற்பட்ட மயிலார்கள் அவர்களின் குழந்தைகளுடன் வயலுக்கு வந்து நெல்லை அறுவடை செய்து சாப்பிடுகின்றனர்.
ஒவ்வொரு நாளும் இதை பார்த்து விட்டு திரும்பும் எனது மனைவி சரஸ்வதி அம்மையார், நமக்கு முன்பே நெல்லை மயிலார்கள் அறுவடை செய்து சாப்பிடுவதாக என்னிடம் முறையீடு செய்வார்கள். அதைக் கேட்ட நானும், நமது மயிலார்கள் தானே…. அவை சாப்பிட்டு விட்டு போகட்டும் என்று அவரை ஆற்றுப்படுத்துவேன்.
இப்படி மயில்களும், முறையீடுமாக எங்கள் வேளாண் பொழுதுகள் கழிகின்றன.” என்று தெரிவிக்கின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”