திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார், பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ்.
திமுக தலைவர் கருணாநிதி, உடல் நலம் சரியில்லாததால் ஒய்வு எடுத்து வருகிறார். கடந்த ஓராண்டுகளாக அவர் கோபாலபுரம் இல்லத்தில் தங்கியிருந்தாலும், முக்கிய நிர்வாகிகள் தவிர வேறு யாரையும் அவர் சந்திப்பதில்லை.
படிப்படியாக உடல் நலம் தேறிவரும் அவர் பத்து நாட்களுக்கு முன்பாக, கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு முரசொலி பவளவிழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார்.
அதன் பின்னர் நேற்று அவருடைய கொள்ளுப்பேரன் திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் தனித்தனியாக அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகும் மு.க.அழகிரி குடும்பத்துடன் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில் பாமக நிறுவனத்தலைவர் டாக்டர் ராமதாஸ், கருணாநிதியை இரவு 8.15 மணிக்கு சந்திக்க இருப்பதாக ட்விட் செய்திருந்தார். சொன்னபடியே இரவு 8.15 மணிக்கு கோபாலபுரம் இல்லத்துக்கு மாநில தலைவர் ஜி.கே.மணியுடன் வந்தார்.
அவரை மூத்த தலைவர்கள் வரவேற்று, முதல் மாடியில் உள்ள கருணாநிதியின் அறைக்கு அழைத்துச் சென்றனர். ராமதாஸ் உங்களைப் பார்க்க வந்திருக்கிறார், என்று கருணாநிதியின் உதவியாளர் சொன்னதும், கையை தூக்கி வரவேற்றார். சில நிமிடங்கள் ராமதாஸ் அவரிடம் பேசினார். ஆனால் கருணாநிதியால் பேச முடியவில்லை.
நோய் தொற்று ஏற்படலாம் என்பதால் இதுநாள் வரையில் கருணாநிதியை கட்சியினர் சந்திக்க முடியவில்லை. இப்போது அவர் உடல் நலம் தேறியுள்ளார். அவர் கழுத்தில் மாட்டப்பட்டுள்ள ட்யூப்பை அடுத்த மாதம் அகற்றலாம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். விரைவில் கழுத்தில் போடப்பட்ட ட்யூப் அகற்றப்பட்டதும், அவருக்கு பேச்சு பயிற்சி கொடுக்கப்படும் என தெரிகிறது.