பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும், கட்சியின் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் இடையே நீண்ட நாட்களாகவே உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. இந்த மோதல் போக்கு தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு, கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில், ராமதாஸ் பேசுகையில், "என் வீட்டிலேயே, நான் அமரும் நாற்காலிக்கு பக்கத்திலேயே யாரோ ஒட்டு கேட்கும் கருவியை வைத்துள்ளனர். யார் வைத்தார்கள், எதற்காக வைத்தார்கள் என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம்" என்று கூறியிருந்தார். இந்த நிகழ்வு, கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து, சென்னையில் இருந்து வந்த ஒரு தனியார் துப்பறியும் குழு, கடந்த மாதம் தைலாபுரம் தோட்டத்திற்கு வந்து அந்த ஒட்டுக்கேட்பு கருவியை ஆய்வுக்காக எடுத்துச் சென்றது. இந்த விவகாரம் குறித்து பாமக தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், கிளியனூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், 8 பேர் கொண்ட போலீஸ் குழு, ராமதாஸ் வீட்டிற்கு வந்து விசாரணை மேற்கொண்டது. தனியார் நிறுவனம் ஆய்வு செய்த கருவி பின்னர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் ராமதாஸ் கூறுகையில், "தைலாபுரம் வீட்டில் உளவுக்கருவி வைத்தது அன்புமணிதான். உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணி ராமதாஸ் தான்.
அன்புமணி ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு பொய்யைச் சொல்லி வருகிறார். அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ள பொதுக்குழு கூட்டம் கட்சி விதிகளுக்கு எதிரானது. பொதுக்குழுவை கூட்ட வேண்டுமென்றால் 15 நாட்களுக்கு முன்பு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால், அன்புமணி இதை பின்பற்றவில்லை. நான் வியர்வை சிந்தி உருவாக்கிய கட்சியை வேறு யாரும் உரிமை கோர முடியாது" என்றும் அவர் அழுத்தமாக கூறினார்.
மேலும், விரைவில் பூம்புகாரில் நடைபெறவிருக்கும் மகளிர் மாநாட்டில் 3 லட்சம் பெண்கள் பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறினார்.