பெண்ணுரிமையை காக்கவும், பெண்களுக்கு எதிரான வன்முறையை போக்கவும், பெண்கள் முன்னேற்றம் காணவும் பா.ம.க மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து மகளிர் பெருவிழா மாநாடு ஞாயிற்றுக்கிழமை (10.08.2025) பூம்புகாரில் நடைபெற்றது.
மாநாட்டிற்கு தலைமை வகித்துப் பேசிய பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், “பெண்கள் இல்லாமல் நாம் இல்லை; உலகமே இல்லை. பெண்களுக்குக் காக்கும் சக்தி உள்ளது. பெண்கள் எல்லா வகையிலும் முன்னேறுவதற்கு வழிகாட்டுவதற்காகவே இந்த மாநாடு நடைபெறுகிறது” என்று கூறினார்.
மேலும், “தந்தையை மிஞ்சிய தனயன் இருக்கக் கூடாது; அதற்கு உதாரணம், ராஜராஜ சோழன் மற்றும் இராஜேந்திர சோழன்; பெரியகோவிலை மிஞ்சும் அளவுக்கு கோயில் கட்டக்கூடாது என இராஜேந்திர சோழன் நினைத்ததே இதற்கு சிறந்த உதாரணம்” என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய டாக்டர் ராமதாஸ், “2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிக் கூட்டணி அமைப்பேன். யார் என்ன சொன்னாலும் காதில் வாங்காதீர்கள்; நான் சொல்வதுதான் நடக்கும்” என்று கூறினார்.
பூம்புகாரில் நடைபெற்ற பா.ம.க மகளிர் மாநாட்டில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், “என்னுடைய அருமை நண்பர் கலைஞர் 20% இடஒதுக்கீடு அளித்தார். 10.5% உள்ஒடுக்கீட்டை முதல்வர் மு.க. ஸ்டாலின் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்; சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதில் முதல்வருக்கு ஏன் தயக்கம்? 10.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில் நாங்கள் போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு தாங்காது” என்று கூறினார்.
“தமிழ்நாட்டில் கஞ்சா, மது என்ற தீமை ஒழிய வேண்டும்; அதை செய்வது பெரிய காரியம் இல்லை. 10 அதிகாரிகளை என்னிடம் அனுப்புங்கள்; நான் சொல்வதை அவர்கள் கேட்டால் சமூக தீமை ஒழிக்கப்படும். பெண்களைவிட ஆண்கள் பின்னால் இருப்பதற்கு இந்த இரு தீமைகள்தான் காரணம்” என்று கூறினார்.
மேலும், “ஆகஸ்ட் 17-ம் தேதி நடக்கும் பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசித்த பின், கூட்டணி குறித்து தெரிவிப்போம். பொதுக்குழு கூட்டத்தில் கலந்து ஆலோசித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தெரிவிப்போம்” என்று கூறினார்.
“என்னுடைய நண்பர் கலைஞர் கருணாநிதி 20% ஒதுக்கீடு அளித்தார். தற்போது, அண்டை மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியுள்ளன. ஆனால், தமிழகத்தில் இன்னும் நடத்தப்படவில்லை. தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் முதல்வருக்கு என்ன தயக்கம்?
உடனடியாக 10.5% உள் ஒதுக்கீடும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 10.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் நாங்கள் போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு தாங்காது. உள் ஒதுக்கீடு கேட்டு 7 நாள்கள் போராட்டம் நடத்தினால் என்ன ஆகும் தமிழ்நாடு.” என்று டாக்டர் ராமதாஸ் பேசினார்.
பூம்புகார் மகளிர் மாநாட்டில் பேசிய பா.ம.க கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, “தந்தை பெரியாருக்குப் பிறகு பெண்களை போற்றுகின்ற, மதிக்கின்ற, அவர்களின் முன்னேற்றத்தை விரும்புகின்ற, அவர்களுக்காக போராடுகின்ற ஒரு தலைவர் என்றால் அவர் மருத்துவர் ராமதாஸ்தான்.” என்று பேசினார்.
இந்த மாநாட்டில் சரஸ்வதி ராமதாஸ், ஜி.கே. மணி எம்.எல்.ஏ., வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி மற்றும் முன்னாள் மத்திய மந்திரிகள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.