/indian-express-tamil/media/media_files/2025/09/25/dr-ramadoss-press-meet-2025-09-25-06-38-16.jpg)
“வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக, வரும் டிசம்பர் முதல் வாரத்தில் வன்னியர் சங்கம் சார்பில், மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்” என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கூறினார்.
திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தலைமையில், அக்கட்சியின் மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்ற வன்னியர் சங்க கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, பா.ம.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், “வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக, வரும் டிசம்பர் முதல் வாரத்தில் வன்னியர் சங்கம் சார்பில், மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். இதில், 30 வயதிற்கு கீழ் உள்ள மாணவர்கள், இளைஞர்கள், மாணவியர் மட்டுமே கலந்து கொள்வர்.
இது தொடர்பாக, ஜி.கே.மணி தலைமையில் போராட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழு, எந்த மாதிரி போராட்டம் நடத்துவது என முடிவு செய்யும். தமிழகமே கிடுகிடுக்கும் அளவில் போராட்டம் நடத்தப்படும்.” என்று கூறினார்.
பா.ம.க-வில் டாக்டர் ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இருவரும் தனித் தனியாக நிர்வாகிகளை நியமித்து செயல்பட்டு வருகின்றனர்.
அன்புமணி தலைமையில் செயல்பட்டு வரும் பா.ம.க-விற்கு மாம்பழ சின்னம் கிடைத்துவிட்டது என்று கூறப்படுவது குறித்து பேசிய டாக்டர் ராமதாஸ், “பொய் பொய்யாக பேசியவர்கள் வேஷம் கலைந்து விட்டது. பொய் சொன்னவர்கள் ஏன் பொய் சொன்னோம் என ஏங்கப் போகின்றனர்.
பா.ம.க பொதுக்குழு கூட்டத்தில், 8,௦௦௦ பேர் கலந்து கொண்டனர். பா.ம.க வன்னியர் சங்கம் என்றால், அது நாங்கள் தான் என்றும் சொல்கிறது ஒரு கும்பல்.
46 வருடங்களாக ஓய்வின்றி உழைத்தவன் நான். ஆனால் இன்று சில கும்பல், நாங்கள்தான் பா.ம.க கட்சி என்று கூறிக்கொள்கிறார்கள் . அவர்களின் வேஷம் விரைவில் கலைந்துவிடும். கலைக்கப்படும்
அதையெல்லாம் கேட்க என்னை போன்றவர்களுக்கே வெட்கமாக இருக்கிறது. எப்போது அன்புமணியை கட்சியை விட்டு நீக்கினோமோ, அப்போதே அவர்கள் வேஷம் கலைந்துவிட்டது. மாம்பழ சின்னம் கிடைத்துவிட்டது என்று கூறுபவர்கள் போலிகள்.” என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.