முதல் கார் நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட டாக்டர் ராமதாஸ்; அம்பாசிடர் சொன்ன கதை!

டாக்டர் ராமதாஸ் தனது அம்பாசிடர் காரில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவர் அந்த அம்பாசிடர் காருக்குப் பிறகு எத்தனை கார்கள் மாற்றியிருந்தாலும் தனது முதல் காரை மறக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

Dr Ramadoss shares memories about his first Ambassador car, dr ramadoss memoriews about first car, dr ramadoss ambassador car, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ராமாதாஸ் முதல் அம்பாசிடர் கார் நினைவுகள், pmk, dr ramadoss, tamil nadu politics, ambassador car

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது முதல் கார் அம்பாசிடர் பற்றிய நினைவுகளை பகிர்ந்துகொண்டுள்ளார். அம்பாசிடர் கார் அவருடனான அனுபவங்களை கூறுவதாக என் கதையை கேளுங்கள் என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

டாக்டர் ராமதாஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், தனது முதல் கார் அம்பாசிடர் பற்றிய நினைவுகள் குறித்து பதிவிட்டிருப்பதாவது:

“என் கதையை கேளுங்க…. நான் தான்
அய்யாவின் அம்பாசிடர் TSh – 1819 பேசுகிறேன்!

மருத்துவர் அய்யாவின் சமூகநீதிப் போராட்டக்களத்தில் அய்யாவுக்கு துணையாக இருந்த தளகர்த்தர்கள் ஏராளம். அவர்களைக் கடந்து அய்யாவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த அஃறிணை ஒன்று உண்டு. அதுதான் நான்….
என்ன… இன்னும் என்னை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லையா?

நான் தான் மருத்துவர் அய்யாவின் மனதுக்கு நெருக்கமான அம்பாசிடர் மகிழுந்து TSh – 1819 பேசுகிறேன்.

வன்னியர் சங்கத்தை நிறுவிய மருத்துவர் அய்யா, இடஒதுக்கீட்டுப் போராட்டங்களை ஒருங்கிணைப்பதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது வன்னியர் சங்கத்தின் பயன்பாட்டிற்காக மகிழுந்தோ அல்லது வேறு வாகனங்களோ இல்லை என்பதால், அவர் பேருந்துகளில்தான் சென்று வருவது வழக்கம். ஒரு கட்டத்தில் மருத்துவர் அய்யாவின் சுமையைக் குறைப்பதற்காக மகிழுந்து வாங்கப்பட்டது. TSh – 1819 என்ற எண் கொண்ட அந்த மகிழுந்து தான் நான்.

நான் வந்த பிறகு மருத்துவர் அய்யா அவர்களின் பணிகள் இன்னும் தீவிரமடைந்தன. நானும் மருத்துவர் அய்யாவின் வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டேன்.

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் மருத்துவர் அய்யா அவர்களை நான் தான் சுமந்து செல்வேன். அய்யாவுடன் ஒரே நேரத்தில் 7 பேர் முதல் 8 பேர் வரை என் மீது பயணம் செய்வார்கள். பல நேரங்களில் இன்னும் கூடுதலானவர்கள் பயணம் செய்ததும் உண்டு. அதுமட்டுமின்றி, மருத்துவர் அய்யா அவர்களும், மற்றவர்களும் காலையில் சாப்பிடுவதற்காக கூழ், நிலக்கடலை ஆகியவையும் பெரிய அளவில் வரும். அவற்றையும் நான் தான் சுமந்து செல்வேன். பல நேரங்களில் கூடுதல் பயணிகளை சுமக்க முடியாமல் சிரமப்பட்டிருக்கிறேன். ஆனால், அப்போதெல்லாம் மருத்துவர் அய்யா அவர்களை நினைத்துக் கொள்வேன். அவர் சுமக்கும் சுமையுடன் ஒப்பிடும் போது நாம் சுமப்பதெல்லாம் ஒரு சுமையா? என எனக்கு நானே கேட்டுக் கொள்வேன்.

என் மீது எத்தனை பேர் பயணித்தாலும் எனது வேகம் மட்டும் குறையாது. என்னை வேறு எந்த ஊர்தியாலும் எட்டிப்பிடிக்க முடியாது. அந்த அளவுக்கு மணிக்கு 120 முதல் 140 கிலோமீட்டர் வேகத்தில்தான் பயணிக்கும்.
எனக்கான உணவை, அதாங்க எரிபொருளை மருத்துவர் அய்யா அவரது சொந்த செலவில்தான் வழங்குவார். அவருக்காக வேறு எவரேனும் எரிபொருள் நிரப்புவதை அய்யா அனுமதிக்கமாட்டார். ஏனெனில், வன்னியர் சங்கப் பணிகளுக்கான செலவுகளை தாமே ஏற்றுக்கொள்வதாகவும், அதற்காக எவரிடமும் உதவி கேட்க மாட்டேன் என்றும் மருத்துவர் அய்யா வாக்குறுதி அளித்திருந்தார்.

ஒருமுறை மருத்துவர் அய்யா சேலத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது, வன்னியர் சங்க நிர்வாகி ஒருவர் அன்பின் மிகுதியால் எனக்கு எரிபொருள் நிரப்பிவிட்டார். அய்யாவுக்கு இது தெரியாது. நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு திண்டிவனம் திரும்பும்போது, ஒரு எரிபொருள் நிரப்பும் இடத்தில் என்னை நிறுத்தி டீசல் நிரப்பிக்கொள் என்று எனது ஓட்டுனரிடம் மருத்துவர் அய்யா கூறினார். அப்போதுதான் அவர் தயங்கி தயங்கி சேலத்திலேயே ஒரு நிர்வாகி எரிபொருள் நிரப்பிக் கொடுத்தார் என்ற உண்மையை அய்யாவிடம் கூறினார்.

அதைக் கேட்டதும் மருத்துவர் அய்யாவின் முகம் சிவந்தது. தமது கொள்கைகளுக்கு மாறாக எனக்கு மற்றவர்களின் காசில் எவ்வாறு எரிபொருள் நிரப்பலாம் என்று ஓட்டுநரை கடிந்துகொண்ட மருத்துவர் அய்யா, அடுத்தவர் காசில் எரிபொருள் நிரப்பப்பட்ட என் மீது பயணிக்க மாட்டேன் என்று கூறி இறங்கிக் கொண்டார். பின்னர் அவ்வழியே வந்த அரசுப் பேருந்தில் ஏறி திண்டிவனத்திற்கு வந்தடைந்தார் மருத்துவர் அய்யா. என் மீது மருத்துவர் அய்யா பயணிக்க மறுத்த அந்த நாள் எனது வாழ்வில் மிகவும் வருத்தமான நாள்.

மருத்துவர் அய்யா அவர்களுடனான பயணத்தில் மறக்க முடியாத பல நிகழ்வுகளும், நினைவுகளும் உண்டு. ஒரு கட்டத்தில் இயக்க முடியாத அளவுக்கு நான் பழுதடைந்தபோது தான் மருத்துவர் அய்யா அவர்கள் மிகவும் கனத்த இதயத்துடன் வேறு வாகனத்திற்கு மாறினார். அதன்பின் எத்தனையோ வாகனங்களை மருத்துவர் அய்யா பயன்படுத்தியிருக்கலாம்… ஆனால், அவை அனைத்தையும் விட அய்யா அவர்களுக்கு மிகவும் பிடித்த பிள்ளை… மூத்த பிள்ளை நான் தான். மருத்துவர் அய்யா அவர்களுக்கு அவர் பயன்படுத்திய, பயன்படுத்திக் கொண்டிருக்கும் மற்ற வாகனங்களின் பதிவு எண்கள் நினைவிருக்குமா? என்பது தெரியாது. ஆனால், மருத்துவர் அய்யா அவர்களை உறக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் எனது பதிவு எண் 1819 என்று கூறுவார். இதை விட எனக்கு வேறு என்ன பெயரும், பெருமையும் வேண்டும்?” என்று அம்பாசிடர் கார் கூறும் விதமாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவில் டாக்டர் ராமதாஸ் தனது அம்பாசிடர் காரில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவர் அந்த அம்பாசிடர் காருக்குப் பிறகு எத்தனை கார்கள் மாற்றியிருந்தாலும் தனது முதல் காரை மறக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Dr ramadoss shares memories about his first ambassador car

Next Story
பிளவுபட்ட அதிமுக-வை இணைக்க முயற்சி… நாளை மறுநாள் இரு அணிகளும் பேச்சுவார்த்தை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com