புகழ்பெற்ற புற்றுநோய் சிகிச்சை மருத்துவரும் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள கச்சார் கேன்சர் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனருமான தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் ரவி கண்ணனுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது.
2020-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய நேற்று அறிவித்தது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், எஸ்.ராமகிருஷ்ணன், தொழிலதிபர் வேணு சீனிவாசன், இசைகலைஞர்கள் லலிதா சிதம்பரம், சரோஜா சிதம்பரம், ஓவியர் மனோகர் தேவதாஸ் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களைத் தவிர, பத்மஸ்ரீ விருது பெறும் ஆளுமைகளின் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர், டாக்டர் ரவி கண்ணனின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அவருக்கு இந்தியா முழுவதும் இருந்து மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
யார் இந்த டாக்டர் ரவி கண்ணன்?
டாக்டர் ரவி கண்ணனைப் பற்றி டிடி நியூஸ், பராக் பள்ளத்தாக்கில் புற்றுநோய் நோயாளிகளின் மருத்துவ மீட்பர் என்று குறிப்பிட்டு அவரை கௌரவப் படுத்தியுள்ளது.
டாக்டர் ரவி கண்ணன், புகழ்பெற்ற புற்றுநோய் சிகிச்சை மருத்துவர். கச்சார் கேன்சர் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர். இவர் ஒரு புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர். இதற்கு முன்பு, சென்னை அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியுட்டில் அறுவை சிகிச்சை துறையில் தலைமை மருத்துவராக இருந்தவர்.
டாக்டர் ரவி கண்ணன் மருத்துவ வட்டாரத்தில் டாக்டர் கண்ணன் என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இவர் அவ்வப்போது சென்னைக்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் கண்ணன் எப்படி அஸ்ஸாமுக்குச் சென்றார் என்பதைப் பார்ப்போம்.
இந்தியா-பங்களாதேஷ் நஎல்லையில், அஸ்ஸாம் மாநிலத்தின் தென்பகுதியில் அமைந்திருக்கிறது பாராக் பள்ளத்தாக்கு. இப்பகுதியில் புற்றுநோய் வேகமாக பரவிக்கொண்டிருந்தது. இதற்கு காரணம் அப்பகுதி மக்கள் புகையிலையை அதிகமாக பயன்படுத்துவதுதான். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அங்கிருந்து சிகிச்சைக்காக ஒரு நல்ல மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமென்றால், 350 கி.மீ. தொலைவில் இருக்கும் குவஹாத்திக்குதான் செல்லவேண்டும். சாலை வசதிகள் சரியில்லாத மலைப்பிரதேசத்தில் சிகிச்சைக்காக அவர்கள் குறைந்தது ஒரு நாள் பயணம் செய்ய வேண்டியிருக்கும்.
கச்சார் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம்
அப்படிப்பட்ட பாராக் பகுதியில் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை ஒன்று அவசியம் என்று கருதிய சில சுதந்திரமான தனிமனிதர்கள் சமூக அக்கறையுடன் 1992-ம் ஆண்டில், அஸ்ஸாம் மாநிலத்தின் கச்சார் மாவட்டத்தின் தலைநகரான சில்சாரில், கச்சார் கேன்சர் ஹாஸ்பிட்டல் சொசைட்டி’ (Cachar Cancer Hospital Society) என்று ஒரு மருத்துவமனையை தொடங்கினர்.
இந்த மருத்துவமனைக்கு பொருளாதார பலம் இல்லாததால் போதுமான வசதிகளைக் கொண்டுவர இயலவில்லை. மருத்துவமனைக்கு நல்ல மருத்துவர்களையும் பணியில் அமர்த்த முடியவில்லை. பெரளவில் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனையாக செயல்பட்டுவந்தது.
இந்த சூழ்நிலையில்தான், 2007-ம் ஆண்டு டாக்டர் கண்ணனுக்கு கச்சார் புற்றுநோய் மருத்துவமனையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. கச்சார் மருத்துவமனையில் பணிக்குச் சேர்ந்த டாக்டர் கண்ணன், அந்தப் பகுதியில் புற்றுநோயின் பாதிப்பு பற்றியும் அப்பகுதி மக்களுக்கு தனது மருத்துவ சேவை எந்தளவுக்கு அவசியமானது என்பதையும் உணர்ந்து செயல்பட்டார்.
டாக்டர் கண்ணன், அஸ்ஸாம் மக்களுக்கு மிகவும் தரமான புற்றுநோய் சிகிச்சையை இலவசமாக அளித்தார். டாக்டர் கண்ணனின் மிகவும் கடுமையான உழைப்பாலும் முயற்சியாலும், அந்த மருத்துவமனை, கச்சார் கேன்சர் ஹாஸ்பிட்டல் அண்ட் ரிசர்ச் சென்டர் (Cachar Cancer Hospital and Research Centre - CCHRC) ஆக மாறியது.
தற்போது இந்த மருத்துவமனையில் டாக்டர் ரவி கண்ணனின் முயற்சியால், ஆண்டுக்கு 3500 புதிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக ஆண்டுக்கு 14,000 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 1300 புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. பராக் பள்ளத்தாக்கில் ஏழை, எளிய மக்களுக்கு உலகத் தரத்தில் புற்றுநோய் கிசிக்கை கிடைக்கிறது.
/tamil-ie/media/media_files/uploads/2020/01/New-Project-2020-01-27T230730.870-300x200.jpg)
இங்கே ஆயிரக்கணக்கானோர் புற்றுநோயின் தொடக்கநிலையிலேயே சிகிச்சை பெற்று முற்றிலும் மீண்டிருக்கிறார்கள். அஸ்ஸாம் மட்டுமின்றி திரிபுரா, மேகாலயா, மணிப்பூர், மிசோரம் உள்ளிட்ட வடகிழக்கு மாநில மக்களுக்கான முக்கியமான புற்றுநோய் சிகிச்சை மையமாக கச்சார் கேன்சர் ஹாஸ்பிட்டல் அண்ட் ரிசர்ச் சென்டர் செயலாற்றிவருகிறது.
இங்கே வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு முற்றிலும் இலவச சிகிச்சை; நடுத்தர மக்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை; மலிவு விலையில் மருந்துகள், நோயாளிகளுக்கு இலவச உணவு, மற்றவர்களுக்கும் மலிவு விலையில் உணவு, மிகக் குறைந்த கட்டணத்தில் உணவுடன்கூடிய தங்கும் வசதி என அனைத்தையும் சாத்தியப்படுத்தியிருக்கிறார் டாக்டர் ரவி கண்ணன்.
அதுமட்டுமில்லாமல், நோயாளி சிகிச்சை பெறும்போது அவர் உடனிருப்போர், தினக் கூலி அடிப்படையில் அங்கே பணியாற்றுவதற்கான வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். சிகிச்சை பெற்றுச் செல்லும் நோயாளிகளின் இல்லத்துக்கே சென்று அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று தொடர்ந்து கவனிக்கிறார்கள். மருத்துவமனைக்கு வர முடியாத நோயாளிகளின் வீடுகளைத் தேடிச் சென்று சிகிச்சை செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. தற்போது இந்த மருத்துவமனை இந்தியாவின் மிக முக்கியமான கிராமப்புற புற்றுநோய் கிசிச்சை மருத்துவமனையாக விளங்குகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2020/01/New-Project-2020-01-27T230904.118-300x200.jpg)
இது குறித்து டாக்டர் கண்ணன் கூறுகையில், எங்களிடம், அர்ப்பணிப்புடன் இயங்கும் ஒரு குழு இருக்கிறது. வேறு ஏதாவது பெருநகரத்தில் நல்ல சம்பளத்தில் பணியாற்றாமல், இங்கே சேவை நோக்குடன் அவர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் நோயிலிருந்து குணமாகி, மகிழ்ச்சியுடன் சிந்தும் அந்தப் புன்னகைதான் எங்களுக்கான திருப்தி. அந்த உணர்வை நிச்சயம் வார்த்தைகளால் விவரிக்க இயலாது” என்று நெகிழ்ச்சியாக கூறுகிறார்.
அஸ்ஸாமில் நாட்டின் எங்கோ ஓர் கோடியில் இத்தகைய அர்ப்பணிப்பு மிக்க பணியைச் செய்துவரும் டாக்டர் ரவி கண்ணனுக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவப்படுத்தியுள்ளது. கச்சார் மாவட்ட நிர்வாகமும் அவருக்கு மரியாதை செய்து கௌரவித்துள்ளது.