டாக்டர் ஷர்மிகா குலோப் ஜாமூன் சாப்பிட்டால் 3 கிலோ எடை அதிகரிக்கும், கண்ட கண்ட உணவுகளை சாப்பிட்டால் டெங்கு, மலேரியா வரும் என்று அறிவியலுக்கு புறம்பாக பேசி விமர்சனத்துக்குள்ளான நிலையில், எல்லாவற்றையும் பேச்சுவாக்கில் தெரியாமல் சொல்லிவிட்டேன் என்று வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
பா.ஜ.க-வைச் சேர்ந்த டெய்சியின் மகளான டாக்டர் ஷர்மிகா ஒரு சித்தமருத்துவர். இவர் யூடியூப் சேனல்களில் உடல்நலம் சம்பந்தமாக கருத்து தெரிவித்தார். டாக்டர் ஷர்மிகா அறிவியலுக்கு புறம்பாக கருத்து தெரிவித்ததாக சமூக ஊடகங்களில் விமர்சனம் செய்யப்பட்டு ட்ரோல் செய்யப்பட்டார்.
டாக்டர் ஷர்மிகா யூடியூப் சேனல்களுக்கு அளித்த நேர்காணல்களில், இந்தியர்கள் மனிதர்களை விட பெரிய விளங்குகளான மாடு போன்றவற்றை சாப்பிட்டால் செரிமானம் ஆகாது என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும், பனை நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரியதாகும் என்று கூறியதையடுத்து, டாக்டர் ஷர்மிகாவை நெட்டிசன்கள் பலரும் விமர்சித்தனர். மேலும், பெண்கள் கவிழ்ந்து படுத்தால் மார்பக புற்றுநோய் வரும்; கடவுள் மனசு வைத்தால்தான் குழந்தை பிறக்கும் என்று கூறி நெட்டிசன்களில் மீம்ஸ் கண்டெண்ட் ஆனார். இது மட்டுமல்ல, கண்ட கண்ட உணவுகளை சாப்பிட்டால் டெங்கு, மலேரியா வரும், குலோப் ஜாமூன் சாப்பிட்டால் 3 கிலோ எடை அதிகரிக்கும் என்று அறிவியலுக்கும் மருத்துவத்துக்கும் புறம்பான தகவல்களைக் கூறியதாக டாக்டர் ஷர்மிகா கடும் விமர்சனத்துக்குள்ளானார்.
இந்த நிலையில், டாக்டர் ஷர்மிகா, கண்ட கண்ட உணவுகளை சாப்பிட்டால் டெங்கு, மலேரியா வரும், குலோப் ஜாமூன் சாப்பிட்டால் 3 கிலோ எடை அதிகரிக்கும் என்று பேச்சுவாக்கில் தெரியாமல் சொல்லிவிட்டேன். அது தவறுதான் என்று கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.
டாக்டர் ஷர்மிகா வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: “குலோப் ஜாமூன் சாப்பிட்டால் 3 கிலோ எடை அதிகரிக்கும் என்று கூறியது ஒரு ஃபுளோவில் வந்த வார்த்தைதான். அது தவறு. பொதுவாக ஸ்வீட் சாப்பிட்டால் எடை அதிகரிக்கும். அதற்கு காரணம், அதில் கலோரி அதிகம். அதனால், நான் சொன்னது 3 கிலோ அதிகரிக்கும் என்றால் 3 கிலோ இல்லை. பொதுவாக எடை அதிகரிக்கும் என்பதைத்தான் பேச்சுவாக்கில் ஃபுளோவில் சொல்லிவிட்டேன். அதே போல, கண்ட கண்ட உணவுகள் சாப்பிடுவதால் டெங்கு மலேரியா வருகிறது என்பதை தவறாக சொல்லிவிட்டேன். அதுவும் பேச்சுவாக்கில் ஒரு ஃபுளாவில் சொல்லிவிட்டேன். எல்லாவற்றுகும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நானும் மனுஷிதான். இது ஹுமன் எரர். பிரைன் எரர் இல்லை. நாம் பேசுவதை இவ்வளவு உன்னிப்பாக கேட்கிறார்கள் என்கிறபோது, இனிமேல் கவனமாகப் பேசுவேன்” என்று டாக்டர் ஷர்மிகா கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”