பிரபல நரம்பியல் டாக்டர் சுப்பையா 2013ம் ஆண்டு கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று சென்னை முதலாவது அமர்வு கூடுதல் நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. மேலும், இந்த கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பொன்னுசாமி, பாசில், போரீஸ், வில்லியம், ஜேம்ஸ் சதீஷ்குமார், முருகன், செல்வ பிரகாஷ் ஆகிய 7 பேருக்கு தூக்கு தண்டனையுடன் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும், மேரி புஷ்பம் மற்றும் ஏசுராஜனுக்கு ஆயுள் தண்டனையும் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதில், ஐயப்பன் அப்ரூவர் ஆகி விட்டதால் அரசு சாட்சியாக கருதப்பட்டு அவருக்கு தண்டனை வழங்கப்படவில்லை என்று அறிவித்தார்.
சென்னையில் 2013ம் ஆண்டு பிரபல நரம்பியல் டாக்டர் சுப்பையா கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்போது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு, டாக்டர் சுப்பையா வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பிரபல நரம்பியல் டாக்டர் சுப்பையாவின் பூர்வீகம் கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியைச் சேர்ந்தவர். சென்னைய் அரசு மருத்துவமனையில் நரம்பியல் நிபுணராக பணியாற்றி ஓய்வு பெற்ற சுப்பையா, சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தார்.
டாக்டர் சுப்பையா, இதற்காக சென்னை துரைப்பாக்கம் மேட்டுக்குப்பத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில்தான் செப்டம்பர் 14, 2013 அன்று ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து காரில் ஏற வந்த டாக்டர் சுப்பையாவை ஒரு மர்ம கும்பல் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடியது.
இதில் படுகாயம் அடைந்த டாக்டர் சுப்பையா, உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுப்பையா 9 நாட்களுக்கு பிறகு செப்டம்பர் 22ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டாக்டர் சுப்பையா இறப்பதற்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள ரூ.15 கோடி சொத்து தொடர்பாக தனக்கும் தனது ஒன்றுவிட்ட சகோதரர் பொன்னுசாமிக்கும் பிரச்னை இருந்துவருவதாக போலீசாரிடம் தெரிவித்திருந்தார்.
டாக்டர் சுப்பையாவை மருத்துவமனை முன்பு ஒரு மர்ம குப்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. டாக்டர் சுப்பையாவை அரிவாளால் வெட்டிய சம்பவம் அங்கே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருந்தது.
டாக்டர் சுப்பையா கொலை தொடர்பாக அவருடைய உறவினர் ஏ.ஏ.மோகன் அளித்த புகாரின் பேரில், சென்னை அபிராமபுரம் காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இந்த வழக்கில் அரசு பணியில் இருந்த ஆசிரியர்கள் பொன்னுசாமி, மேரி புஷ்பம், வழக்கறிஞர் பாசில், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், பொறியாளர் போரிஸ், கூலிப்படையைச் சேர்ந்த ஏசுநாதன், முருகன், செல்வபிரகாஷ் ஐயப்பன் ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீசாரின் விசாரணையில், கன்னியாகுமரி மாவட்டம், காணிமடத்தைச் சேர்ந்த பொன்னுசாமி குடும்பத்தினருக்கும் டாக்டர் சுப்பையாவுக்கும் இடையே நாகர்கோவிலில் உள்ள அஞ்சுகிராமத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துப் பிரச்னை இருந்தது தெரியவந்தது. மேலும், இந்த சொத்து தொடர்பாக, தொடரப்பட்ட வழக்கில், நிதிமன்றம் சுப்பையாவுக்கு சாதகமாக தீர்ப்பளித்துள்ளது. இதனால், பொன்னுசாமி குடும்பத்தினர் கூலிப்படை வைத்து டாக்டர் சுப்பையாவை கொலை செய்தது தெரியவந்தது.
இதனைத் தொடந்து, டாக்டர் சுப்பையாவை கொலை செய்த வழக்கில், பொன்னுசாமியையும் அவரது குடும்பத்தினரையும் கைது செய்ய போலீசார் தேடி வந்த நிலையில், பொன்னுசாமியின் மகன் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பாசில், மற்றொரு மகன் போரிஸ் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதையடுத்து, பொன்னுசாமியும் அவரது மனைவி மேரி புஷ்பமும் கோவையில் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் போலிசார் நடத்திய விசாரணையில், டாக்டர் சுப்பையாவை கூலிப்படையினர் மூலம் கொலை செய்தது தெரியவந்தது.
டாக்டர் சுப்பையவை கொலை செய்த கூலிப்படையினரை அடையாளம் கண்டு கைது செய்வதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது. ஏனென்றால், கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருந்த காட்சியில் கொலை செய்தவர்களின் முகம் தெளிவில்லாமல் இருந்தது. அதனால், அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து, தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், டாக்டர் சுப்பையா கொலைவழக்கில் நேரடியாக தொடர்புடைய, திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரைச் சேர்ந்த டாக்டர் ஜேம்ஸ் சதீஷ் குமார், தண்டையார்குளத்தைச் சேர்ந்த முருகன், திருக்குறுங்குடியைச் சேர்ந்த ஐயப்பன், ரோஸ்மியாபுரத்தைச் சேர்ந்த செல்வபிரகாஷ் ஆகியோர் கைது செய்தனர்.
டாக்டர் சுப்பையாவின் கொலையில் நேரடியாக தொடர்புடைய கூலிப்படையாக செயல்பட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்த பொன்னுசாமியின் மகன் பாசிலின் நண்பர் உயர்நீதிமன்ற வழக்குரைஞர் வில்லியம்ஸ் மூலம் டாக்டர் ஜேம்ஸ் அறிமுகம் கிடைத்துள்ளது.
வழக்கறிஞர் பாசில், ஜேம்ஸிடம், தங்களுக்கும் டாக்டர் சுப்பையாவுக்கும் சொத்துப் பிரச்னை இருப்பது கூறியுள்ளார். அதனால், சுப்பையாவை கொலை செய்துவிட்டால் அந்த சொத்து தங்களுக்கு கிடைக்கும் என்றும் கூறியிருக்கிறார்.
இந்த பிரச்னையை முடித்துக் கொடுத்தால் கிடைக்கும் சொத்தில் பாதி பணத்தை தருவதாக பாசில், ஜேம்ஸிடம் கூறினாராம். இதற்கு சம்மதித்த டாக்டர் ஜேம்ஸ் தனக்கு தெரிந்த முருகன், ஐயப்பன், செல்வபிரகாஷ் ஆகிய 3 பேர் மூலம் டாக்டர் சுப்பையாவை கொலை செய்வதாகவும், அதற்கு அவர்களுக்கு கூலியாக ரூ.50 லட்சம் கொடுக்க வேண்டும் என கூறினராம். இதற்கு, பாசில் ஒத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, கூலிப்படையினர் சுப்பையாவின் நடமாட்டத்தை கண்காணித்து அவரை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மருத்துவமனைக்கு வெளியே டாக்டர் சுப்பையாவை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். டாக்டர் சுப்பையாவை வெட்டிய அந்த கும்பல் மும்பைக்கு தப்பி சென்றனர். அவர்கள் சிலநாள் கழித்து சொந்த ஊருக்கு திரும்பியடு தெரியவந்தது.
டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட டாக்டர் ஜேம்ஸ், திருநெல்வேலியில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றுகிறார். வள்ளியூரில் சொந்தமாக ஒரு மருத்துவமனையும் நடத்தி வருகிறார். அதொடு, டாக்டர் ஜேம்ஸ் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் கைதான பொன்னுசாமி குடும்பத்தினர், ஜாமீன் பெற்று வெளியே வந்த பிறகு, அடிக்கடி டாக்டர் ஜேம்ஸையும், கூலிப்படையினரையும் சந்தித்துப் பேசி வந்துள்ளனர். இதை போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்துள்ளனர்.
இதையடுத்து, டாக்டர் சுப்பையா கொலை வழக்கில், கூலிப்படையினரையும், டாக்டர் ஜேம்ஸையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில், கூலிப்படையாக செயல்பட்டவர்களை கைது செய்வதற்கு ஐயப்பன் என்பவர் அரசு தரப்பு சாட்சியமாக மாறினார். அவர்தான், கொலைச் சம்பவம் குறித்து வாக்குமூலம் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். ஐயப்பனின் வாக்குமூலம்
டாக்டர் சுப்பையாவின் கொலை வழக்கில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. இந்தக் கொலையை செய்தால் ரூ.50 லட்சமும் வெளிநாட்டில் வேலைவாங்கித் தருவதாகவும் பொன்னுசாமி குடும்பத்தினர் கூறியதாக ஐயப்பன் போலீசாரிடம் தெரிவித்தார். இதனால், டாக்டர் சுப்பையாவை கொலை செய்ய, குற்றம்சாட்டப்பட்டுள்ள முருகன், செல்வபிரகாஷ் ஆகியோருடன் நானும் சென்றேன்.அவர்களை இருசக்கர வாகனத்தில் நான்தான் அழைத்துச் சென்றேன் என்று ஐயப்பன் வாக்குமூலம் அளித்தார். மேலும், ஒரு உயிரை காப்பாற்றும் டாக்டரை கொலை செய்தது மன உளைச்சலைத் தந்தது. எனவே தாமாக முன்வந்து இந்த வாக்குமூலத்தை அளிப்பதாக ஐயப்பன் தெரிவித்தார்.
டாக்டர் சுப்பையாவின் கொலை வழக்கில், ஐயப்பன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு கூலிப்படையினர் உள்பட குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று சென்னை முதலாவது நீதிமன்றம் உறுதி செய்தது.
அரசுத் தரப்பில் 57 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 173 ஆவணங்கள், 42 சான்றுப் பொருட்கள் குறியீடு செய்யப்பட்டன. எதிரிகள் தரப்பில் 3 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 7 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டன. சாட்சி விசாரணை மற்றும் இறுதி வாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பை சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி அறிவித்தார்.
சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி அளித்த தீர்ப்பில், பொன்னுசாமி, பாசில், போரீஸ், வில்லியம், ஜேம்ஸ் சதீஷ்குமார், முருகன், செல்வ பிரகாஷ் ஆகிய 7 பேருக்கு தூக்கு தண்டனையுடன் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், மேரி புஷ்பம் மற்றும் ஏசுராஜனுக்கு ஆயுள் தண்டனையும் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதில், ஐயப்பன் அப்ரூவர் ஆகி விட்டதால் அரசு சாட்சியாக கருதப்பட்டு அவருக்கு தண்டனை வழங்கப்படவில்லை என்று அறிவித்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.