தமிழக முதல்வராக எடப்பாடி பதவி ஏற்று ஓராண்டு முடிவுக்கு வந்துவிட்டது. அருவருடைய ஆட்சியின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனிடம் கேட்டோம்.
‘‘தமிழக முதல் அமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்ற போது, இன்னும் இரண்டு மாதத்தில் கவிழ்ந்துவிடும். ஒரு வாரத்தில் கவிழ்ந்துவிடும் என்று பரபரப்பாக எதிர்கட்சியினரும், அவருடைய கட்சியை சேர்ந்த சிலருமே சொல்லி வந்தார்கள். அதை எல்லாம் சந்தித்து, லாவகமாக சமாளித்து ஒரு வருடத்தை ஓட்டிவிட்டார். இதுவே அவரை பொறுத்தவரையில் சாதனைதான்.
இதுவரை இருந்த முதல்வர்களைப் போலில்லாமல், எளிதில் அனுகக்கூடிய முதல்வராக இருக்கிறார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டதும், கோயில்களில் கடைகள் வைப்பதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். முதல்வரும் அதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்காகவே அவருக்கு நூற்றுக்கு ஐம்பது மதிப்பெண்கள் கொடுக்கலாம்.
ஆனால், அவர் ஆட்சியில் ஊழல் கொஞ்சம் கூட குறையவில்லை. லஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடுகிறது. சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. பெண்கள் கணவனோடு செல்லும் போதே தாலி அறுக்கப்படுகிறது. ரவுடிகள் ராஜ்யம் தறி கெட்டு போய்விட்டது. சட்டவிரோத செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அது மட்டுமல்லாமல், இந்த அரசு மக்களுக்கான அரசு என்ற நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்த தவறிவிட்டார். மக்களுக்கான திட்டங்களையோ, ஏழைகள் வாழ்வில் உயர்வடையும் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. இதற்காக அவருக்கு 50 மதிப்பெண்களை குறைக்க வேண்டும்.
ஒட்டு மொத்தமாக பார்த்தால் இந்த அரசுக்கு நூற்றுக்கு ஐம்பது மார்க் கொடுக்கலாம்.