பிட்ஸ் வந்து சாலையில் விழுந்து கிடந்தவரை, காரில் சென்று கொண்டிருந்த பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சிகிச்சை அளித்தார்.
தமிழக பாஜக தலைவராக இருப்பவர் டாக்டர் தமிழிசை. இவர் நேற்று சாலிகிராமத்தில் இருந்து, தி.நகரில் உள்ள கட்சி அலுவலகமான கமலாலயத்துக்கு வந்து கொண்டிருந்தார். சைதாப்பேட்டை அருகே வந்த போது, சாலையில் ஓரத்தில் கூட்டமாக இருப்பதைப் பார்த்த அவர், உடனடியாக காரில் இருந்து இறங்கி என்ன என்று விசாரித்திருக்கிறார்.
சாலையில் 45 வயது மதிக்கத் தக்க ஒருவர் பிட்ஸ் வந்து விழுந்து விட்டதாக அங்கிருந்தவர்கள் சொல்லியுள்ளனர். உடனடியாக தமிழிசை, அவருக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார். மயக்கம் தெளிந்த அவரிடம் பேசிய போது, பெரியபாளையம் சொந்த ஊர் என்றும், எனக்கு பிட்ஸ் இருக்கிறது. மாத்திரையும் கையில் இருக்கிறது என்று சொல்லி, பாக்கெட்டி இருந்து மாத்திரையையும் எடுத்துக் காட்டியுள்ளார்.
ஏன் மாத்திரை சாப்பிடவில்லை என தமிழிசை கேட்டதும், ‘கையில் காசு இல்லை. அதனால் சாப்பாடு சாப்பிட முடியவில்லை. சாப்பாடு சாப்பிடாததால் மாத்திரை சாப்பிடவில்லை' என்று சொல்லியுள்ளார். உடன் தமிழிசை காரில் இருந்த பிஸ்கட் மற்றும் உணவை எடுத்துக் கொடுத்து அவரைச் சாப்பிட வைத்துள்ளார். அதன் பின்னர் மாத்திரை சாப்பிட வைத்து அவரை அனுப்பி வைத்துள்ளார்.