Dr V Shantha passed away Tamil News : மூத்த புற்றுநோயியல் நிபுணரும் சென்னை அடையார் புற்றுநோய் நிறுவனத்தின் தலைவருமான 94 வயதான டாக்டர் வி சாந்தா, செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார்.
உடல்நிலை குன்றிய நிலையில், அப்போலோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் சாந்தா. அங்கு, ரத்தக்குழாயில் ஏற்பட்ட ஓர் அடைப்பை அகற்றவேண்டிய முயற்சி தோல்வியடைந்ததால், அதிகாலை 3.55 மணிக்கு சாந்தா உயிரிழந்தார்.
65 ஆண்டுகளுக்கு முன்பு ரெசிடென்ட் மருத்துவ அதிகாரியாகச் சேர்ந்த காந்தி நகரில் உள்ள புற்றுநோய் நிறுவனத்தின் பழைய கட்டிடத்தில் அவருடைய உடல் வைக்கப்பட்டது. சாந்தாவைப் பல வழிகளில் ஊக்கப்படுத்திய முன்னாள் தலைமை டாக்டர் எஸ். கிருஷ்ணமூர்த்தியின் உடல் வைத்திருந்த அதே மண்டபத்தில்தான் சாந்தாவின் உடலும் வைக்கப்பட்டது.
நோபல் பரிசு பெற்ற சி.வி.ராமன் மற்றும் எஸ்.சந்திரசேகர் ஆகியோரின் புகழ்பெற்ற குடும்பத்தில் மார்ச் 11, 1927-ல் பிறந்த சாந்தா புற்றுநோயியல் துறையில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்தார். அவர், புற்றுநோய் நிறுவனத்தில் உள்ள ஒரு சிறிய அறையில் தங்கி, தன் தேசத்தில் உள்ள அனைத்து நோயாளிகளுக்கும் தரமான மற்றும் மலிவு விலையில் புற்றுநோய் சிகிச்சையை மேற்கொள்ளும்படி செய்தவர். மேலும், புற்றுநோய் நோயாளிகளைப் பராமரிப்பதற்கும், நோயைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்கும் விழிப்புணர்வைப் பரப்புவதற்கும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர். தேசிய மற்றும் சர்வதேச சுகாதாரக் குழுக்களில் பணியாற்றியுள்ளார். ரமோன் மக்சசே விருது மற்றும் பத்ம விபூஷன் உட்படப் பல விருதுகளை வென்றுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"