/indian-express-tamil/media/media_files/2025/10/12/nagendran-son-2025-10-12-14-10-04.jpg)
ரவுடி நாகேந்திரன் சடலம் முன்பு... மாலை மாற்றி தாலி கட்டி திருமணம் செய்த 2-வது மகன் அஜித்
சென்னை வியாசர்பாடியில் 1997-ம் ஆண்டு முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ. ஸ்டான்லி சண்முகம் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவுடி நாகேந்திரன், பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 24வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில், நீண்ட கால உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை அன்று சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ரவுடி நாகேந்திரன் காலமானார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 15, 2024 அன்று உணவு டெலிவரி செய்வதுபோல் வந்த மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில் ரவுடி நாகேந்திரன் (24வது குற்றவாளி), அவரது மகன், வழக்கறிஞரான என். அஸ்வத்தாமன் உட்பட 25க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். சிறையில் இருந்தபோதே ஆம்ஸ்ட்ராங்கைக் கொலை செய்ய நாகேந்திரன் சதி செய்ததாகச் செம்பியம் தனிப்படை காவல்துறை குற்றம் சாட்டியது.
ஆற்காடு சுரேஷ் மரணத்திற்குப் பழிக்குப் பழியாக இந்தக் கொலை நடத்தப்பட்டதாகச் சரணடைந்த குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்தனர். ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் தொடர்ந்த மனுவின் பேரில், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.
கல்லீரல் பாதிப்பு உள்ளிட்ட நீண்டகால உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நாகேந்திரன், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த வியாழக்கிழமை அன்று உயிரிழந்தார். நாகேந்திரனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது மனைவி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதன் அடிப்படையில், மருத்துவமனையில் மருத்துவர் செல்வகுமார் தலைமையில் நாகேந்திரனின் உடலுக்கு உடற்கூறாய்வு நடத்த ஐகோர்ட் உத்தரவிட்டது. மேலும், இந்த செயல்முறையை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, ஆயுள் தண்டனைக் கைதி நாகேந்திரனின் உடல் அவரது மகன் அஸ்வத்தாமனிடம் ஒப்படைக்கப்பட்டு, வியாசர்பாடியில் உள்ள வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது.
நாகேந்திரனின் உடலுக்கு அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், ஏற்கெனவே திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டிருந்த நாகேந்திரனின் 2வது மகன் அஜித் ராஜுக்கும் அவரது வருங்கால மனைவிக்குமான திருமணம், நாகேந்திரனின் சடலத்துக்கு முன்பாகவே நடத்தி வைக்கப்பட்டது. திருமண ஏற்பாடுகள் நடந்த நிலையில், தந்தையின் மரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆயுதங்கள் பதுக்கிவைக்கப்பட்ட விவகாரத்தில் அஜித் ராஜுக்கும் தொடர்பு இருந்ததாக மே மாதம் அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாகேந்திரனின் இறுதிச் சடங்கில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு, வடக்கு மண்டல காவல் இணை ஆணையர் மேற்பார்வையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் வியாசர்பாடி, கொடுங்கையூர் முல்லை நகர் மயானப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. நாகேந்திரனின் உடல் கொடுங்கையூர் முல்லை நகர் மயானத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.