சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், "மந்திரம் கற்போம்; வினைத் தந்திரம் கற்போம்" என்ற பாரதியாரின் பாடலை சுட்டிக்காட்டி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பேசினார்.
சென்னை பல்கலைக்கழக 165வது பட்டமளிப்பு விழா சென்னை, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. அப்போது, ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 416 பட்டதாரிகளுக்கு பட்டங்களை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். இதில் 108 பட்டதாரிகளுக்கு பட்டங்களுடன், தங்கப்பதக்கங்களையும் வழங்கினார்.
இதையும் படியுங்கள்: இனிய மாணவச் செல்வங்களே..!’ திரவுபதி முர்மு- ஸ்டாலின் முன்பு தமிழில் பேசிய ஆளுனர் ரவி
தொடர்ந்து, " நமஸ்கார்" எனக் கூறி தனது உரையை தொடங்கினார். தொடர்ந்து, "ராதாகிருஷ்ணன், அப்துல்கலாம், வெங்கட்ராமன், வி.வி. கிரி, நீலம் சஞ்சீவ ரெட்டி உள்ளிட்ட மொத்தம் 6 ஜனாதிபதிகளை சென்னை பல்கலைக் கழகம் உருவாக்கியுள்ளது" என்றார்.
மேலும், "மந்திரம் கற்போம்; வினைத் தந்திரம் கற்போம் வான அளப்போம் கடல் மீனை யளப்போம் சந்திர மண்டலத்தில் கண்டு தெளிவோம்' அங்கேயே நின்றுவிடுவோமா? இல்லை. 'சந்தி, தெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம்” இந்த பாரதியாரின் பாடலை நினைவுகூர்ந்து மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்தினார்.
இதை அடுத்து பாலின சமத்துவத்தில் சென்னை பல்கலைக்கழகம் சிறந்து விளங்குகிறது; மாணவ மாணவியர்கள் எந்தப் பிரச்சனையிலும் கவலையில் சோர்ந்து விடக்கூடாது. பெண் குழந்தைகள் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பெண் குழந்தைகள் கல்வியில் வளர்ச்சி அடையும் போது நாடும் வளர்ச்சி அடையும்" என்றார். குடியரசு தலைவர் இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வந்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“