பள்ளிகளில் விவேகானந்தர் கண்காட்சிக்கு அனுமதி; பெரியார் நூலுக்கு தடையா? வீரமணி கேள்வி

தந்தை பெரியாரின் நூலை நூலகத்திற்கு வழங்கக் கூடாது, மாணவர்களுக்கும் விநியோகம் செய்யக் கூடாது என்று வற்புறுத்த, போராட்டம் நடத்திட, முற்றுகையிட அவர்களுக்கு அதிகாரம் அளித்தது யார்? என திராவிடக கழக தலைவர் கி வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்,

பள்ளிகளில் விவேகானந்தர் கண்காட்சிக்கு அனுமதி; பெரியார் நூலுக்கு தடையா? வீரமணி கேள்வி

திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள நுாலகத்துக்கு, விரும்புவோர் புத்தகங்களை தானமாக வழங்கலாம் என பள்ளி நிர்வாகம் அறிவித்திருந்தது. தன்னார்வலர்கள் புத்தகங்கள் வழங்கி வந்தனர்.

நேற்று ஒருவர் நுாலகத்துக்கு மூட்டை நிறைய புத்தகங்களை வழங்கியுள்ளார். அதில், ஈ.வெ.ரா.,எழுதிய, ‘பெண் ஏன் அடிமையானாள்’ புத்தகம், 2,000 பிரதிகள் இருந்துள்ளன.தகவல் தெரிந்ததும், திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில் பாஜகவினர், ‘புத்தகங்களை யாருக்கும் தரக்கூடாது’ என பள்ளியை முற்றுகையிட்டனர்.

இதை சுட்டிகாட்டி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது, ” தந்தை பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்’ என்ற புகழ்பெற்ற நூல் தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் சென்றடைந்துள்ளது.

இந்த நூல் ஏதோ தடை செய்யப்பட்ட ஒன்று என்பதுபோல மூன்று முறை தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸை உள்ளடக்கிய சங் பரிவார்கள் கூக்குரலிடுவதும், பள்ளியை முற்றுகையிடுவதும் எந்த வகையில் சரியானது?

தந்தை பெரியாரின் நூலை நூலகத்திற்கு வழங்கக் கூடாது, மாணவர்களுக்கும் விநியோகம் செய்யக் கூடாது என்று வற்புறுத்த, போராட்டம் நடத்திட, முற்றுகையிட அவர்களுக்கு அதிகாரம் அளித்தது யார்? முன் அனுமதியில்லாமல் பள்ளியை முற்றுகையிட்ட வர்கள்மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்? கைது செய்யாதது ஏன்? அடாவடித்தனத்தில் ஈடுபட்டவர்களிடம் பணிவது என்ற நிலை தொடர்ந்தால், நாட்டில் சட்டம் – ஒழுங்குப் பிரச்சினை தலைவிரித்து ஆடாதா?

விவேகானந்தர் 152 ஆம் ஆண்டு என்ற பெயரில் பிரச்சார வாகனம் தமிழ்நாட்டில் உள்ள கல்விக் கூடங்களில் எல்லாம் சென்று பிரச்சாரம் செய்யப்பட வில்லையா? ஆன்மிகக் கண்காட்சி நடத்தப்பட வில்லையா? அதெல்லாம் எதன் அடிப்படையில்?

தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 – சமூகநீதி நாள் என்று அறிவித்தது – நடைபெறும் ஆட்சி. தமிழ்நாட்டின் தந்தை – பெரியார் என்று உயர்நீதி மன்ற நீதிபதி நீதிமன்றத்தில் சொன்னதுண்டு. சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்!

சமூகநீதிக்கான சரித்திர நாயகராம் தளபதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையில் வீறுநடை போடும் ஓர் அரசு அமைந்த நிலையில், தந்தை பெரியாரை சமூக விரோதிபோல சித்தரிக்கும் சிறு நரிக் கூட்டத்தின் சட்ட விரோத, நியாய விரோத செயல்களை அனுமதிக்கக் கூடாது.

சங் பரிவார்கள் பல இடங்களிலும் அத்துமீறலில் ஈடுபட்டு வருவது அரசின் கவனத்திற்கு வந்திருக்கும் – சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Dravidan leader k veeramani statement about bjp oppose periyar book in school

Exit mobile version