/indian-express-tamil/media/media_files/2025/09/05/dravidar-kazhagam-k-veeramani-trichy-press-meet-tamil-news-2025-09-05-10-16-49.jpg)
"தமிழகத்திற்கு மோடி வந்தார் பன்னீர் செல்வம் கூட்டணியிலிருந்து வெளியேறினார். அமித் ஷா வந்தார் டி.டி.வி தினகரன் வெளியேறி உள்ளார்." என்று கி.வீரமணி தெரிவித்தார்.
திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருச்சி வந்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, திருச்சி புத்தூர் அருகே உள்ள பெரியார் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாடு பெரியார் மண். இங்கு திராவிட இயக்கத்தை தவிர வேறு எந்த ஆதிக்க இயக்கத்திற்கும் இடமில்லை என்கிற நிலை உருவாக்கி வைக்கப்பட்டுள்ளது. திராவிட இயக்கம் 101-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கலைஞர் மறைவுக்கு பின் வெற்றிடம் உருவாகி விட்டதாக சிலர் கூறினர். ஆனால் இது வெற்றிடமல்ல மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்குமிடம் என முதல்வர் ஸ்டாலின் நிரூபித்துள்ளார்.
முதலீட்டை பெறுவதற்காக சென்று இருந்தாலும் பெரியார் தான் எங்கள் முதலீடு என எடுத்துரைக்கும் வகையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் புகைப்படத்தை திறந்து வைக்கிறார்.
ஒன்றிய பா.ஜ.க ஒவ்வொரு துறையிலும் ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை புகுத்துகிறார்கள் அந்த வகையில் கல்வி துறையிலும் ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை புகுத்தும் வகையில் LOCF என்ற திட்டத்தை பல்கலைக்கழகங்களில் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார்கள். இதன் மூலம் புராணங்கள், ஜோதிடங்களை கற்க வேண்டும் எனக் கூறி இருக்கிறார்கள், அதனை எதிர்த்து செப்டம்பர் 8 ஆம் தேதி திராவிட மாணவர் கழகம் சார்பில் பெருநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். அறிவியல் வளர்ந்து வரும் நிலையில் புராண கருத்துக்களை பா.ஜ.க வினர் பரப்புகிறார்கள், மக்களிடம் திணிக்கிறார்கள்.
பல்கலைக்கழகங்களில் ஆளுநர்களை தங்கள் கைக்குள் வைத்துக் கொண்டு பல்வேறு ஆர்.எஸ்.எஸ் கருத்துகளை திணிக்கிறார்கள். வெளியிலிருந்து எந்த வித தலையீடும் இருக்க கூடாது. வேதத்தை படித்தவர்கள் ஐ.ஐ.டியில் சேரலாம் என்கிற நிலையை உருவாக்கி வைத்துள்ளார்கள். ஆர்.எஸ்.எஸ் - பாஜக இடையே பனிப்போர் நிலவுகிறது. வயது மூப்பு தொடர்பாக இன்றும் தங்கள் இயக்கத்துக்கு தலைவரை தேர்ந்தெடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றனர்.
மைனாரிட்டி அரசாகவே பா.ஜ.க அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. இரண்டு முதல்வர்கள் முட்டுக் கொடுப்பதால் இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எப்பொழுது வேண்டுமானாலும் ஆட்சி நம்மை விட்டு போகலாம் என தங்களிம் திட்டத்தை வேகமாக செயல்படுத்த பார்க்கிறார்கள். பீகார் தேர்தலை மையப்படுத்தி தான் ஜி.எஸ்.டி வரி குறைப்பு நடவடிக்கை எடுத்துள்ளார்கள். அவசர அவசரமாக ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்துகிறார்கள்.
பா.ஜ.க வின் அடுத்த தலைவர் யார் என முடிவு செய்ய கூட அவர்களால் முடியவில்லை. ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஏற்று கொள்ள முடியாதது. நாய்கடி தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு நாய்கடியை விட அதிக கடியை கடித்திருக்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் அப்படி தான் இருக்கிறது. டெட் தேர்வு தொடர்பாக வந்த தீர்ப்பும் இறுதி தீர்ப்பல்ல மேல் முறையீடு செய்யலாம்.
ஆசிரியர்களின் பணிப்பாதுகாப்பு குறித்த மாற்று வழிகள் ஆராய வேண்டும். இது ஆசிரியர்கள் பிரச்சினை மட்டுமல்ல எதிர்கால கல்வி பிரச்சினை, மனிதாபிமான பிரச்சனை. இந்த விவகாரத்தில் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள வேண்டும்.
தமிழகத்திற்கு மோடி வந்தார் பன்னீர் செல்வம் கூட்டணியிலிருந்து வெளியேறினார். அமித் ஷா வந்தார் டி.டி.வி தினகரன் வெளியேறி உள்ளார். தொடர்ந்து அவர்கள் வர வேண்டும் அப்போது தான் கூட்டணியிலிருந்து எல்லோரும் வெளியேறி விடுவார்கள். தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் இருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க வும் எடப்பாடியார் மட்டும் தான் உள்ளனர். அ.தி.மு.க-வில் எத்தனை எழுத்துக்கள் உள்ளதோ அத்தனை பிரிவுகளாக அவர்கள் பிரிந்து உள்ளார்கள். அந்த கூட்டணியிலிருந்த பா.ம.க வில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளது. இப்படி தான் அந்த கூட்டணி உள்ளது. தமிழ்நாட்டில் எல்லாவற்றையும் மாற்றி விடுவேன் என கூறி பலர் அரசியலுக்கு வந்துள்ளார்கள். தற்போது அரசியலுக்கு வந்துள்ள விஜய் தன் கொள்கையை கூட இது வரை கூறவில்லை. அவர் பேசுவது அனைத்தும் சினிமா பஞ்ச் டயலாக் தான். அதை நாம் ரசிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது மாவட்டத் தலைவர் ஆரோக்கியராஜ் மற்றும் தாளக்குடி ஆல்பர்ட், செந்தமிழ்இனியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.