/indian-express-tamil/media/media_files/XQzQmanJGXPywiL8lLrx.jpg)
இந்து மத விவகாரங்கள் தொடர்பாக சங்கராச்சாரியர்கள்தான் கருத்து கூற முடியுமே தவிர பாரதிய ஜனதா கட்சியினர் கருத்து கூற முடியாது என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறினார்.
திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் தமிழர் திருநாள் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கலந்துகொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ராமர் கோவில் திறப்பு விழாவில் இந்தியா கூட்டணியை சேர்ந்த பெரும்பாலான கட்சிகள் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்திருப்பதை நாங்கள் வரவேற்கிறோம்.
பக்தி என்பது அவரவர் தனிச்சொத்து. ஆனால் பா.ஜ.க வினர் அதை அரசியலுக்கு பயன்படுத்துகிறார்கள். கட்டி முடிக்கப்படாத கோவிலை பிரதிஷ்டை செய்ய கூடாது என 4 சங்கராச்சாரியார்கள் கூறியுள்ளார்கள்.
இந்து மத விவகாரங்கள் தொடர்பாக சங்கராச்சாரியார்கள் தான் கருத்து கூற முடியுமே தவிர பாஜகவினர் கூற முடியாது. பாஜகவை எதிர்ப்பவர்கள் சனாதான விரோதிகள், இந்து மத விரோதிகள் என கூற கூறும் பாஜகவினர், தற்பொழுது சங்கராச்சாரியார்களை பார்த்து அவ்வாறு கூறுவார்களா?
முடிந்தால் பா.ஜ.கவினர் அதை கூறட்டும். இல்லையென்றால் அவ்வாறு மற்றவர்களை கூறுவதை நிறுத்த வேண்டும். தேர்தல் வரக்கூடிய சூழலில் தற்பொழுது பாஜகவினர் ராமனையே வேட்பாளராக நிறுத்துகிறார்கள்.
ராமன் ஒருபோதும் வேட்பாளராக கூடாது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி திஹாருக்கு போவார் என்று கூறுகிறார். எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் ஜெயிலுக்கு போவார் என கூறுகிறார்.
ஸ்டாலின் மட்டுமே கோட்டைக்கு போவார். இரண்டு பேருமே கோட்டைக்கு செல்வேன் என கூறாமல் ஜெயிலுக்கு செல்வேன் என கூறி வருகிறார்கள்.
ஆண்டிக்கு கூட மடம் இருக்கிறது. ஆனால், ஓ.பன்னீர்செல்வத்திற்கு அது கூட இல்லை. அவருக்கு இடம் எங்கும் இல்லை. எங்கு போவது என தெரியாமல் நின்று கொண்டிருக்கிறார்” என்றார்.
துணை முதல்வராக உதயநிதி தேர்ந்தெடுக்கப்பட உள்ளாரா? என்ற கேள்விக்கு, “அதனை அறிவிப்பவர்கள் அறிவிக்க வேண்டும், அவருக்கு தகுதி இருக்கா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டியவர் முதல்வர்.
அமைச்சர்கள் நியமனத்தில் இது போன்ற செயலில் ஆளுநர் ஈடுபட்டு மூக்கு உடைபட்டு இருக்கிறார். அவருடைய பணியை சிறப்பாகவும், அடக்கமாகவும் செய்து வருகிறார். அதனால் அவர் அனைத்து தகுதிகளையும் பெற்றவர்” என்றார்.
இந்நிகழ்வின் போது திருச்சி மாவட்ட தலைவர் ஆரோக்கியசாமி மற்றும் திராவிடர் கழகத்தினர் உடனிருந்தனர்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.