/indian-express-tamil/media/media_files/2025/10/05/suba-veerapandian-kovai-2025-10-05-19-19-46.jpeg)
விஜய்க்கு இருப்பது "புகழ் போதை" இப்படி எந்த தலைவரும் இருந்தது கிடையாது என திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சு.ப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
சங்கமம் அமைப்பின் 20 ஆவது ஆண்டு விழாவையொட்டி, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் மற்றும் ஆணிவேர் படைப்பரங்கம் இணைந்து, செல்வின் இயக்கத்தில் "மீசைத் திமுரு" என்ற நவீன நாடகம் கோவை ஹோப்ஸ் காலேஸ் தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் பேராசிரியர் சு.ப.வீரபாண்டியன், மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், உள்ளிட்ட முற்போக்கு அமைப்பு தலைவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கரூரில் உயிரிழந்த மக்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
முன்னதாக பேசிய பேராசிரியர் சு.ப.வீரபாண்டியன் கூறும் போது, “கரூர் பற்றி எத்தனையோ செய்திகள் உண்டு. ஆனால் இப்போது கரூர் பேரவலமாக, கரும்புள்ளியாக தமிழ்நாட்டில் அமைத்துவிட்டது. நான் அறிந்த வரை ஒருவரை பார்க்கப் போய் 41 பேர் இறந்ததாக கேள்விப்படவில்லை. கும்பமேளா போன்ற நிகழ்வுகள் வேறு. ஆனால் தனி மனிதரை பார்க்கச் சென்று மக்கள் உயிரை பலிகொடுத்துள்ளனர். மக்களிடமும் பெரிய மாற்றம் கொண்டு வரவேண்டிய தேவை எல்லாரிடமும் உள்ளது என்பதை உணர முடிகிறது.
இச்சம்பவத்திற்கு யார் காரணமோ அவர்கள் இதை பற்றி பேசாமல் இருப்பதும், மக்களை பார்க்காமல் இருப்பதும் இன்னொரு அவலமாக படுகிறது. அரசு மிக நிதானமாக நடந்து கொள்கிறது. ஏன் விஜய் கைது செய்யப்படவில்லை என கூட்டணி கட்சிகளில் இருந்து குரல் வந்த பின்னரும் கூட அரசு அவசரப்படாமல் நிதானமாக நடந்து கொள்கிறது. காரணம் இதை யாரையோ பழி வாங்கும் நோக்காமாக இருக்க கூடாது, எது சரியோ அதை செய்ய வேண்டும் என கருதுவதாக இருக்கிறது.
உயர் நீதிமன்றமே அழுத்தமாக எல்வாற்றையும் கூறி விட்ட நிலையில், இப்போது அவர்கள் உச்ச நீதிமன்றம் போயுள்ளனர். இது வெறும் சட்டம் தொடர்பானது அல்ல, சமூகம் தொடர்பானது.
புதிதாக துவங்கிய கட்சிக்கு அமைப்பும், அனுபவமும் இல்லை என்பது தான் காரணம். எந்த தலைவர் வந்தாலும், இனி இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் வேண்டாம். திடலில் சென்று பேசட்டும், மக்கள் பாதுகாப்பு முக்கியம்.
தமிழகம் எல்லா நிலையிலும் மேலோங்கி நிற்கிறோம். ஆனால் இந்த நிகழ்ச்சி தமிழகம் இவ்வளவு தானா என்று பிற மாநிலத்தார் நினைக்க வைக்கும் அளவிற்கு தரம் தாழ்த்தி இருக்கிறது. இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், இனி இம்மாதிரியான நிகழ்வு நடக்காமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு அரசு, மக்கள் எல்லோருக்கும் உள்ளது.
வேறு எங்கும் நடக்கவில்லை என கேட்பதே அடிப்படையில் தவறானது. மதுரையில் இறந்துள்ளனர். நாமக்கல்லில் மூச்சுத்திணறல், இங்கு கூடுதலாக நடந்துள்ளது. மேலும் அவருக்கு மக்கள் மீது உள்ள அக்கறை என்ன என்பதையும் கேட்க வேண்டியதாக உள்ளது.
இது ஒரு புகழ் போதை, எந்த தலைவரும் இப்படி செய்தது இல்லை. ஊர்தியில் அமர்ந்து கொண்டு விளக்கை அணைத்து அணைத்து போடுவது, விளையாட்டு காட்டும் போக்கு, அனுபவம் இன்மை, வயது குறைவு, கட்சிக்கான அமைப்பு பலமின்மையை காட்டுகிறது.
தி.மு.க உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் தலைவர் வரும் போது ஒழுங்குகளை செய்வார்கள், இந்த கட்சியில் அப்படி யாரும் இல்லையோ என தோன்றுகிறது. யார் பேச்சை வேண்டுமானாலும் கேளுங்கள், யார் முன்னாலும் பைத்தியம் போல ஓடாதீர்கள், இது மக்களுக்கும் அழகில்லை, அவர்களுக்கும் மரியாதை இல்லை, தமிழ்நாட்டிற்கும் பெருமை தராது என்றார்.
பி. ரஹ்மான், கோவை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.