திராவிட மாடல் ஆட்சி என்பது வெறும் அரசியல் கோஷம் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் ” திராவிட மாடல் என்பது வெறும் அரசியல் கோஷம். காலாவதியான ஒரு கொள்கையை உயிர்ப்புடன் வைக்க மேற்கொள்ளப்படும் முயற்சி. நமது ஒரே பாரதம் என்ற கொள்கைக்கு, திராவிட மாடல் என்பது எதிரானது.
தனிபட்டமுறையில் எனக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. என்னிடம் அவரும், அவரிடம் நானும் மரியாதையுடன் நடந்துகொள்கிறோம். ஆனால் ஆளுநர் தனது அதிகாரத்தை மீறி எல்லை தாண்டி செயல்படுகிறார் என்று திமுக அரசு முன்வைக்கும் குற்றச்சாட்டு பொய்யானது. ஆளுநருக்கு இருக்கும் எல்லை என்பது அரசியல் சாசனத்திற்கு வகுக்கப்பட்டது.
நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆளுநர் மாளிகை நிதி பற்றி பொய்யான ஒன்றை கூறியுள்ளார். பெட்டி கிரான்ட்டில் விதிமீறல் என்று அவர் கூறியது தவறு .அது 2000-ம் ஆண்டில் நீக்கப்பட்டுவிட்டது.
ஆளுநர் மாளிகை செலவினம் பட்ஜெட்டுக்கு உட்பட்டது. ஆனால் அதெற்கான வரம்பு இல்லை என்றே நிதிக் கோட்பாடுகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆளுநரின் விருப்புரிமைக்கு கட்டுப்பாடில்லை. அதனால் பெட்டி கிராண்டில் வரம்பு மீறல் என்பது அப்பட்டமான பொய் என்று அவர் கூறினார்.
மேலும் தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய சித்தா பல்கலைக்கழக மசோதா நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அந்த மசோதா பல்கலைக்கழக மானிய குழு விதிகளுக்கு எதிராக உள்ளதால் நிறுத்திவைக்கபப்ட்டுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil