மழைக்காலத்தில் தொற்று நோய்கள் அதிகம் பரவும் அபாயம் உள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், சளி பாதிப்பு ஏற்படும். பெற்றோர் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். அந்தவகையில் டெங்கு பரவல் குறித்தும் விழிப்புடன் இருக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவுகிறது. இந்த வகை கொசு தேங்கி நிற்கும் தண்ணீரில் உருவாகிறது. குறிப்பாக நம் சுற்றுப்புறம், சாலை, கொட்டாங்குச்சி, தண்ணீர் பாட்டிகளில் உருவாகி பரவுகிறது.
எனவே சுற்றுப்புறத்தை சுகாதாரமாக, தூய்மையாக வைத்துக் கொள்வது அவசியம். அதன் அடிப்படையில் கோவையில் மாநகராட்சி பகுதிகளில் சுற்றுப்புற சுகாதார மேம்பாடு குறித்தும் டெங்கு காய்ச்சல் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவையைச் சேர்ந்த சம்பத் என்பவர் கொசு போன்று வேடமணிந்து டெங்கு கொசு பரவல், காய்ச்சல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

நகரின் முக்கிய பகுதிகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். கழுத்தில் டெங்கு கொசு குறித்த வாசகம் அடங்கிய பதாகை, கொட்டாங்குச்சி போன்றவற்றை மாலையாக அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். டெங்கு கொசு உற்பத்தியாகும் கொட்டாங்குச்சி, தண்ணீர் பாட்டில்களை மாலையாக அணிந்துள்ளார்.

கொசு உற்பத்தியாகும் பொருட்களை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். இந்த பொருட்களை கேட்பாடற்று பொதுவெளியில் வீசக்கூடாது. சம்பத் செய்யும் இந்த டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்து வருகிறது. பார்த்துவிட்டு பாராட்டுவதோடு மட்டுமின்றி பொதுமக்கள் அனைவரும் தங்கள் சுற்றுப்புறத்தையும் பொதுவெளியையும் பாதுகாக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக உள்ளது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”