உரிமம் இல்லாத மற்றும் உரிமத்தை புதுப்பிக்க கோரி குடிநீர் உற்பத்தி ஆலைகள் அளிக்கும் விண்ணப்பங்களை 15 தினங்களில் பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத குடிநீர் ஆலைகளை மூடக்கோரி சென்னை புழலைச் சேர்ந்த சிவமுத்து என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக செயல்படும் குடிநீர் ஆலைகளை உடனடியாக மூட உத்தரவிட்டனர்.
சிங்காரச் சென்னை வரலாறு 1 : இது தங்கசாலை தெரு உருவான கதை…
அதன்படி தமிழகம் முழுவதும் அதிகாரிகள் 684 ஆலைகளை மூடி சீல் வைத்தனர். இதையடுத்து தனியார் குடிநீர் ஆலை உரிமையாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் இன்று இடைக்கால உத்தரவிட்டனர். அதில் உரிமம் பெறாததால் மூடப்பட்ட குடிநீர் ஆலைகள் அரசு விதிகளைப் பின்பற்றி மீண்டும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்கும்போது அந்த விண்ணப்பங்களை தமிழக அரசு சட்டத்துக்குட்பட்டு 15 நாட்களுக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். அதன்பிறகும் உரிய அனுமதி பெறாமல் இயங்கும் தனியார் குடிநீர் ஆலைகளையும், சட்டவிரோதமாக நிலத்தில் இருந்து தண்ணீரை உறிஞ்சும் தொழிற்சாலைகளையும் அதிகாரிகள் உடனடியாக மூடி சீல் வைக்க வேண்டும். மேலும், குடிநீர் ஆலைகளுக்கு புதிதாக விண்ணப்பிக்கும்போதோ அல்லது உரிமத்தை புதுப்பிக்க கோரும்போதோ குடிநீர் ஆலை உரிமையாளர்கள் அனைவரிடமும் 50 ஆயிரம் ரூபாய் முன்வைப்பு தொகையாக வசூலிக்க வேண்டும். நிலத்தடி நீரை உறிஞ்சும் குடிநீர் ஆலைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு உரிய கட்டணத்தை நிர்ணயம் செய்வது தொடர்பாக தமிழக அரசு கொள்கை முடிவு எடுப்பதாக இருந்தால் அதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், நிலத்தடி நீர் சட்டவிரோதமாக திருடப்படுகிறதா என்பதை கண்காணிக்க தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதிகளின் மேற்பார்வையில் 2 மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்பு குழுவை உருவாக்க வேண்டும். இந்தக் குழு உறுப்பினர்கள் மாதம் தோறும் 2 முறை ஆய்வு மேற்கொண்டு சட்டவிரோதமாக செயல்படும் ஆலைகள் குறித்து மாவட்ட முதன்மை நீதிபதி வாயிலாக உயர் நீதிமன்றத்துக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். நிலத்தடி நீரை மாவட்டம் வாரியாக அளவீடு செய்து சமீபத்திய அறிக்கை தாக்கல் செய்வது, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உறுதிசெய்வது, உரிமம் பெற்றுள்ள ஆலைகள் எவ்வளவு நீரை எடுக்கிறார்கள் என்பதற்கான அளவீடு கருவியை பொருத்துவது மற்றும் ஆலைகளுக்கு அனுமதி வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் தமிழக அரசு வரும் மார்ச் 13 அன்று பதிலளிக்க வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“