காரில் சீட் பெல்ட் அணியாமல் வந்ததற்கு, போலீசார் தாக்கியதால் நடுரோட்டில் தீக்குளித்த டிரைவர் மணிகண்டன் சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். இந்த நிகழ்வை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டித்தனர்.
சென்னையில் பழைய மகாபலிபுரம் சாலையில் கடந்த புதன்கிழமை (ஜனவரி 24) போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே காரில் வந்த இளைஞர் மணிகண்டன் சீட் பெல்ட் அணியாமல் இருந்துள்ளார். இதனால் மணிகண்டனை போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது அவருக்கும் காவல்துறையினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சாலையில் வைத்தே மணிகண்டனை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் மணமுடைந்த மணிகண்டன் காரில் இருந்த பெட்ரோலை தன்மீது ஊற்றி நடு ரோட்டில் தீக்குளித்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மணிகண்டனை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 28 வயதாகும் மணிகண்டன் கார் ஓட்டுநராக பணிப்புரிந்து வருவதாகவும், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் சீட் பெல்ட் அணியாததால் தன்னை அடித்ததாகவும், தாகாத வார்த்தைகளால் தீட்டியதாகவும் மணிகண்டன் வீடியோவில் வாக்குமூலம் அளித்திருந்தார். சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வேகமாக பரவியது. இதனையடுத்து, போலீசாரின் அநாகரிக செயலை கண்டித்து பொதுமக்கள் மற்றும் ஓட்டுநர் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, ஏற்கனவே காவல் உதவி ஆய்வாளர் தாமரைச் செல்வன் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.