சென்னையில், 116 கிலோமீட்டர் தூரத்திற்கு மூன்று வழித்தடங்களில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப் பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பால பாதையாகவும் முக்கியமான வழித்தடங்கள் அமைக்கப்படவுள்ளன.
இதில், பூந்தமல்லி - போரூர் இடையே பல்வேறு இடங்களில் ரயில் பாதை அமைக்கும் பணிகள் மற்றும் பொறியியல் கட்டுமானங்கள் ஆகியவை இறுதிகட்டத்தை அடைந்தன. அதனடிப்படையில், பூந்தமல்லி- போரூர் இடையே மெட்ரோ ரயில் சேவையை வரும் டிசம்பர் மாதம் தொடங்குவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த வழித்தடத்தின் ஒரு பகுதியாக பூந்தமல்லி - முல்லைத்தோட்டம் இடையே மூன்று கிலோமீட்டர் தூரம் அமைக்கப்பட்டுள்ள மேம்பால பாதையில், நேற்று (மார்ச் 20) மாலை, ஓட்டுநர் இல்லாமல் மெட்ரோ ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மாலை 4:30 மணிக்கு திட்டமிடப்பட்டிருந்த இந்த சோதனை ஓட்டம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மாலை சுமார் 6 மணி வரை நடத்தப்படாமல் இருந்தது.
இதனிடையே, அந்த விழத்தடத்தில் சோதனை வாகனம் வந்தது. அதன் பின்னர், ரயில் வரும் என்று எதிர்பார்த்த சமயத்தில், சுமார் 6:30 மணிக்கு மெட்ரோ ரயில் வழித்தடத்தில் உள்ள மின்கம்பிகள் திடீரென அறுந்து விழுந்தன. மேலும், ரயில் பாதையின் அருகே இருந்த மின்விநியோக பெட்டிகளும் வெடித்துச் சிதறின. இதனால், மின் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, தனியார் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் 5 பேர் கொண்ட குழுவினர் பராமரிப்பு வாகனம் மூலம் சென்று, மின்கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்தப் பணிகள் முடிவடைந்ததும் சுமார் 4 மணி நேரத்திற்கு பின்னர், ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அந்த வகையில் பூந்தமல்லி மெட்ரோ ரயில் பணிமனையில் இருந்து முல்லா தோட்டம் வரையில் சுமார் 2.5 கி.மீ. தூரத்துக்கான சோதனை ஓட்டம் நடந்தது. அப்போது, 20 முதல் 30 கி.மீ வேகத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது. அந்த வகையில், எந்த வித இடர்பாடுகளும் இன்றி, சோதனை ஓட்டம் வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து, வரும் டிசம்பர் மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்காக பூந்தமல்லி - போரூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குநர் சித்திக் கூறினார்.