தமிழ்நாடு மத்திய சிறைச்சாலைகளின் வளாகங்களை விரைவில் ஆளில்லா பறக்கும் டிரோன்களைப் பயன்படுத்தி கண்காணிக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இதன் மூலம் நாட்டில் சிறைச்சாலைகளை கண்காணிப்பதற்கு டிரோன்களைப் பயன்படுத்துவது இதுவே முதல் முறை என்று காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் ஆண்களுக்கு 9 மத்திய சிறைகளும், பெண்களுக்கு 4 சிறப்பு சிறைகளும் உள்ளன. இதில் 13,000 க்கும் மேற்பட்ட விசாரணைக் கைதிகளும் தண்டனைக் கைதிகளும் உள்ளனர்.
இந்த சிறைச்சாலைகளில், வேலூர், திருச்சி. கோயம்புத்தூரில் உள்ள 3 சிறைகளும் 100 ஏக்கரில் பரப்பளவில் அமைந்துள்ளன. மீதமுள்ள சிறைகள் 20 முதல் 45 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன.
சிறைகளில் ஆள் பற்றாக்குறை உள்ளதால், குற்றவாளிகள், குறிப்பாக அதிக ஆபத்துள்ள சிறை அறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை உன்னிப்பாக கண்காணிப்பது ஒரு கடினமான பணியாக உள்ளது.
சிறைத்துறை நிர்வாகம், கைதிகள் சிறையில் செல்போன் போன்ற பொருட்கள் கிடைக்காமல் செய்வதற்கு, செல்போன்களைப் பயன்படுத்துவதை தடுப்பதற்கு செல்போன் ஜாமர் கருவிகள் நிறுவப்பட்டுள்ளது. மேலும், சிறைகளில் நெருக்கமாக கண்காணிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
சிறைச்சாலைகளை மிகவும் உன்னிப்பாக கண்காணிக்க டிரோன்கள் வாங்குவதற்கு ரூ. 21.85 லட்சம் ஒதுக்கப்படும் என்று தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்திருந்தது. அதன் முதல் கட்டமாக ஒன்பது ட்ரோன்களை வாங்குவதற்கு சிறைத்துறை திட்டமிட்டுள்ளது, அப்படி வாங்கப்படும் ஒவ்வொரு டிரோனும் ரூ.2.25 லட்சம் என்று ஒரு அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆளில்லா டிரோன்களை வாங்குவதற்கான டெண்டர்களை காவல்துறை அறிவித்திருந்தாலும் மூத்த அதிகாரிகள் சிறைத் துறையின் தேவைக்கு ஏற்றவாறு டிரோன்களை வாங்க காவல் துறையின் தொழில்நுட்ப பிரிவின் உதவியை நாடியுள்ளனர்.
சிறைகளில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்கள் செயலிழந்துவிட்டன. இத்தகைய சூழ்நிலையில், சிறை வளாகத்தை உன்னிப்பாக கவனித்து கலவரம் போன்ற சூழ்நிலைகளில் உடனடியாக நடவடிக்கை எடுப்பது என்பது ஒரு கடினமான பணியாக இருக்கிறது. அதனால், சிறைக்குள் சட்டவிரோதமாக பொருள்கள் கொண்டு செல்லப்படுவதைத் தடுக்க டிரோன்கள் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.