போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் ஜூன் 23, 2025 அன்று கைது செய்யப்பட்டு, ஜூலை 7 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. பிரசாத் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நுங்கம்பாக்கம் காவல்துறையினர் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தினர்.
சாலிகிராமத்தில் உள்ள ஸ்ரீகாந்தின் வீட்டிலிருந்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட அவர், தான் போதைப்பொருள் பயன்படுத்தியதில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது எந்த போதைப்பொருளும் கண்டறியப்படவில்லை.
இருப்பினும், ஸ்ரீகாந்தின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. ஒரு முறை பயன்படுத்தியிருந்தால்கூட 45 நாட்கள் வரை இந்தப் பரிசோதனையில் கண்டறிய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார்.
சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி தயாளன் முன் ஆஜர்படுத்தப்பட்ட ஸ்ரீகாந்துக்கு ஜூலை 7-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அவர் முதல் வகுப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஐந்து வருடங்களாக பிரசாத்திடம் போதைப்பொருளை வாங்கி பயன்படுத்தி வந்ததாக ஸ்ரீகாந்த் விசாரணையில் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கொக்கைன் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான இந்த வழக்கில், கழுகு புகழ் நடிகர் ஸ்ரீகிருஷ்ணா உள்ளிட்ட மேலும் பல திரை பிரபலங்களுக்குத் தொடர்பு இருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.