Jaffer Sadiq: டெல்லியில் உள்ள மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார், மேற்கு டெல்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்திய சோதனையின் போது போதை பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 50 கிலோ சூடோஎபிடிரைன் என்கிற ரசாயனப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், இதற்கு மூளையாகச் செயல்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளராகவும், தி.மு.க.வில் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராகவும் இருந்த ஜாபர் சாதிக்கை விசாரிக்க முயன்றபோது தலைமறைவாகிவிட்டார். தி.மு.க அவரை கட்சியில் இருந்து நீக்கியது.
இதனிடையே, ஜாபர் சாதிக் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க, அனைத்து விமான நிலையங்களுக்கும் 'லுக்-அவுட்' நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அவரது 8 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளன. மேலும் அவரது சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோரையும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் பதுங்கியிருந்த ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அவரிடம் இரவு முழுதும் விசாரணை நடத்தப்பட்டிருக்கலாம் எனத்தெரிகிறது. அவர் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், கைது நடவடிக்கை தொடர்பான விரிவான செய்தியாளர் சந்திப்பு இன்று பிற்பகல் 2 மணிக்கு உள்ளதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“