போதைப் பொருள் எதிர்ப்பு இயக்கம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். திரைப்பட நடிகர்கள் ஆர்த்தி, கணேஷ்கர், இசை அமைப்பாளர் சத்யா, நடிகர் மற்றும் இயக்குனர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினர்கள் போதைப் பொருள் தடுப்பு குறித்த கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய துணைநிலை ஆளுநர், ஏற்கனவே பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறோம். இந்த நிகழ்ச்சி எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
மருத்துவ சிகிச்சைக்கு உரியவற்றை போதையாக எடுத்துக் கொள்வதில் இன்பம் இல்லை. வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதுதான் இன்பம். பட்டாம்பூச்சியைப் பார்ப்பதில் இருக்கும் இன்பம் போதை ஏற்றுக் கொள்வதில் இல்லை. போதை பொருள் மூளையை மழுங்கடித்து உடலை கெடுத்துவிடும். வாழ்க்கையை நல்ல பாதையில் வாழ்வதற்காக பிறந்தோமே தவிர போதையில் போவதற்கு பிறக்கவில்லை.
நம்மையும் அழித்து பிறரையும் கெடுத்து யாரையும் வாழ விடாமல் செய்கிறது போதை. நாம் இன்று ஒரு சபதம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் போதை வஸ்துகள் எதையும் பயன்படுத்த மாட்டேன். போதை வஸ்துகள் பயன்படுத்துவதை தடுப்பேன். மற்றவர்கள் பயன்படுத்துவதற்கும் நான் எதிராக இருப்பேன். விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு நான் ஒரு காரணியாக இருப்பேன் என்று நினைத்துக் கொள்ள வேண்டும்.
மக்கள் இயக்கம் எதுவென்றாலும் மக்களிடம் இருந்து வர வேண்டும். அதுவே முக்கியத்துவம் பெறும். எத்தனை பேர் எடுத்துச் சொன்னாலும் நாம் உணர்ந்து அதன் மூலம் நடவடிக்கை எடுக்கும்போதுதான் அது சாத்தியமாகும். எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு சமுதாயம் நினைத்தால் இந்த உலகத்தை புரட்டிப் போடலாம். அது மாணவர் சமுதாயம். மாணவர்கள் நினைத்தால் நடைபெறாதது ஒன்றுமில்லை.
பள்ளிகளுக்கு போகும்போது நான் அடிக்கடி சொல்லுவேன், மற்றவர்களுக்கு முன் பேசுவதைக் காட்டிலும் மாணவ மாணவிகளுக்கு முன் பேசும்போது பயம் வரும். ஏனென்றால் இன்றைய மாணவ மாணவிகள் நம்மை விட அறிவாளிகளாக இருக்கிறார்கள். மாணவர்களிடம் ஒரு விஷயத்தை சொன்னால் அது மற்ற எல்லோரிடத்திலும் போகும் என்பது தான்.
போதைப் பொருள் ஒவ்வொரு உறுப்பையும் அழுக வைக்கிறது. நம்மை அழ வைக்கிறது. அம்மாக்கள் கூட பெண் குழந்தைகள் வீட்டுக்கு வரும்போது காலதாமதம் குறித்து கேட்கிறார்கள். ஆனால் ஆண் பிள்ளைகளை அப்படி கேட்பதில்லை. அதனால்தான் அம்மாக்கள் பெண் பிள்ளைகளை கேட்பது போல் ஆண் பிள்ளைகளையும் கேட்க வேண்டும் என்று கூறினேன். நாம் அனைவரும் சேர்ந்துதான் சமுதாயத்தை சீர்படுத்த வேண்டும்.
நாம் பெற்றோர்களுக்கு நல்ல பிள்ளைகளாக இருந்து சமுதாயத்திற்கும் நல்லது செய்தால் நல்லது. போதையினால் வரும் தீமைகள் பற்றி எழுதுங்கள். அதை சமூக வலைதளங்களில் மற்றவர்களுக்குப் பரவ விடுங்கள். நிச்சயமாக நாம் எல்லோரும் நல்லவர்களாக, வல்லவர்களாக மாறி மற்றவர்களுக்கு கெடுதல் வராமல் இருக்க நினைக்க வேண்டும்.
சிறுமி ஆர்த்தியின் நிகழ்வு நடைபெற்றதிலிருந்து மிகுந்த வருத்தமாக இருக்கிறது. அரசு எல்லாவற்றையும் கட்டுக்குள் வைத்திருக்கிறது. ஆனால் அதையும் மீறி தனிமனித பழக்க வழக்கத்தை ஒன்றும் செய்ய முடியாது. அரசு கடத்தலை, பதுக்கலைத் தடுக்கலாம். ஆனால் தனி மனித போதை பழக்கத்தை தடுக்க முடியாது. அதனால்தான் இளைஞர்களிடம் சொல்கிறோம். பக்கத்து வீட்டில் நடப்பது நமக்கு தெரியும். காவல்துறைக்கு தெரியாது. அதனால் தான் உங்களை அழைத்தது. காவல்துறைக்கு இருக்கும் அதிகாரமும் பலமும் உங்களுக்கும் இருக்கிறது.
இன்றிலிருந்து துணைநிலை ஆளுநர் மாளிகையில் 7339555225 என்ற ஒரு வாட்ஸ்அப் எண் தரப்படுகிறது. போதைத் தடுப்பு சம்பந்தமாக எந்த தகவலாக இருந்தாலும் தெரியப்படுத்தலாம். இது ஆளுநர் மாளிகை அதிகாரிகளால் நேரடியாக கண்காணிக்கப்படும். சமுதாய உணர்வோடு இந்த எண் தரப்படுகிறது.
இந்த எண் மற்றவர்களுக்கும் சொல்லலாம். போதை பொருள் பற்றிய தகவல்கள் சந்தேகங்கள் இருந்தால் இந்த எண்ணில் சொல்லலாம். தகவல் அனுப்பலாம். என்னுடைய அதிகாரிகள் அதற்கு பதில் தருவார்கள். இது மக்களோடு நேரடி தொடர்பில் இருக்க வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு எண், என்று தெரிவித்தார்.
செய்தியாளர்: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.