க.சண்முகவடிவேல்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கல்லக்குடியில் டால்மியா சிமெண்ட் ஆலை இயங்கி வருகின்றது. கல்லக்குடி நகரின் பேரூராட்சித் தலைவரும், தி.மு.க நகர தலைவருமான பால்துரை கடந்த சில தினங்களுக்கு முன்பு டால்மியா சிமெண்ட் கம்பெனிக்குள் அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளார். அங்கிருந்த காவலாளிகளை தாக்கி, வரவேற்பு அறையில் உள்ள கணிப்பொறி மற்றும் மேஜை நாற்காலிகளை உடைத்துள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பால்துரை உள்ளிட்ட 3 பேர் மீது டால்மியா சிமெண்ட் நிறுவனம் சார்பில் கல்லக்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பால்துரை டால்மியா சிமெண்ட் தொழிற்சாலை முன்பு இரவு நேரத்தில் மதுபோதையில் வந்து ரகளை செய்தார் என்றும், அங்கு இருந்த உதவியாளர்களை தாக்கினார் என்றும் கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளரான பால்துரை டால்மியா சிமெண்ட் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் வாங்கியுள்ளார் என்றும், ஆலையின் நிர்வாகத்தை தான் சொல்லும் நபர்களுக்கு பணி வழங்க வேண்டும் என நிர்பந்தித்தார் என்றும் கூறப்படுகிறது. அதற்கு டால்மியா சிமெண்ட் நிர்வாகம் மறுப்புத் தெரிவித்தும், அவரை ஆலைக்குள் நுழைய தடை விதித்தும் உள்ளது. இதன் காரணமாகத் தான் அவர் ரகளையில் ஈடுப்பட்டதாகவும் கூறப்படுறது.
பால்துரை மீது டால்மியா சிமெண்ட் நிறுவனம் புகார் அளித்ததன் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, பால்துரை திருச்சில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil