தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த மண்டலம் இன்று (நவ 26) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (நவ 27) புயலாக மாறவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு 'ஃபீஞ்சல்' என பெயரிடப்பட்டுள்ளது.
இதனிடையே, கடலூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பாக நாளை (நவ 27) நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதேபோல், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பருவ தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுகளுக்கான மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகங்கள் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழையின் காரணமாக விழுப்புரம், திருவள்ளூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (நவ 27) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“