வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக மாறியது. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.
தற்போது புயல் ஆந்திரா மாநிலம் அருகே நிலைகொண்டுள்ளது. வரும் 5ம் தேதி முற்பகலில் நெல்லூர்- மசுலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும். புயல் காரணமாக சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி ஆகிய துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், நாகை, காரைக்கால், பாம்பன்,தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றம் தொடர்பான புகார்களுக்கு சென்னை குடிநீர் வாரியத்தின் புகார் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
அவை, 044-4567 4567 (20 lines) மற்றும் கட்டணமில்லாத தொலைபேசி எண் 1916 ஆகும்.
இதற்கிடையில், சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய 12 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சென்னைக்கு வர வேண்டிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சென்னை வேளச்சேரி அருகே உள்ள அடுக்குமாடி கட்டடம் ஒன்று பூமிக்குள் இறங்கியது. இந்த அடுக்குமாடிக் கட்டடத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் சிக்கியுள்ளனர்.
இவர்களை மீட்கும் பணிகள் நடந்துவருகின்றன. முதல்கட்டமாக கட்டடத்தில் இருந்த 2 பேர் மீட்கப்பட்டு, அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் கிண்டி காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“