சுமார் 12-க்கும் மேற்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏறத்தாழ 16.05 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கும் மேல் பாசன வசதி பெறுகின்றன.
ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி முதல் ஜனவரி 28-ம் தேதி வரை 230 நாட்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் திறக்கப்பட வேண்டும்.
இது காலந்தொட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது 249 நாட்களுக்குப் பிறகு நேற்று மாலை 6 மணிக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் தண்ணீர் திறப்பு திடீரென நிறுத்தப்பட்டதால் டெல்டா மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா, தாளடி நெற்பயிர்கள் பாதிக்கக்கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேட்டூர் அணை கடந்த ஆண்டு மே மாதத்திலேயே நிரம்பும் நிலை ஏற்பட்டதால் டெல்டா பாசனத்திற்காக வழக்கத்தை விட முன் கூட்டியே மே 24-ம் தேதி திறக்கப்பட்டது.
இதன் மூலம் திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இலக்கையும் தாண்டி 4.72 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டது.
மேலும் சம்பா, தாளடி பருவத்திலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் 3.47 லட்சம் ஏக்கரிலும், திருவாரூர் மாவட்டத்தில் 3.75 லட்சம் ஏக்கரிலும், நாகை மாவட்டத்தில் 1.67 லட்சம் ஏக்கரிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 1.80 லட்சம் ஏக்கரிலும் என மொத்தம் 10.69 லட்சம் ஏக்கரில் நற்பெயர்கள் சாகுபடி செய்யப்பட்டன.
இதில் முன்பட்ட சம்பா சாகுபடி பணிகளை தொடங்கிய விவசாயிகள் கடந்த டிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் இருந்து அறுவடையை தொடங்கி விட்டனர். இருந்தபோதிலும் இதுவரை 10 முதல் 15 சதவீத பரப்பில் மட்டுமே அறுவடை பணிகள் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆகவே, சம்பா தாளடி பருவ அறுவடை பணிகள் வருகிற பிப்ரவரி மாதத்தில் உச்ச நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே மேட்டூர் அணை வழக்கம்போல் ஜனவரி 28-ம் தேதி மாலை 6 மணியுடன் மூடப்பட்டதால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
சம்பா பயிர்களை பொருத்தவரை பெரும்பாலான இடங்களில் கதிர் விட்டு அறுவடைக்கு தயாராகும் நிலையில் உள்ளதால் தற்போது மேட்டூர் அணை மூடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன், “தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி உள்ளிட்ட மேட்டுப்பகுதிகளில் தண்ணீர் வருவதில் தாமதம் ஏற்பட்டதால் சாகுபடி பணிகளும் தாமதமாகவே தொடங்கப்பட்டன.
மேற்கண்ட இடங்களில் பயிர்கள் வளர்ச்சி நிலையிலேயே இருக்கிறது. தொடர் மழையால் சாகுபடி பணிகள் தாமதமாக தொடங்கப்பட்ட பகுதிகளிலும் அறுவடைக்கு தயாராக ஒரு மாதமாகும் சூழல் உள்ளது.
அதேபோன்று குறுவையை முடித்த விவசாயிகளும் தொடர் மழையால் தாளடி பணிகளை தாமதமாகவே தொடங்கினர்.
மேலும் சம்பா தாளடி பயிர்களில் தொடர் மழையால் இளம் பயிர்கள் பாதிக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து மறு சாகுபடி நவம்பர் மாத இறுதியிலும் டிசம்பரிலும் தொடங்கினர். குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் சம்பா தாளடி பயிர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டதால் பெரும்பாலான விவசாயிகள் மறு சாகுபடிக்கு இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் இந்த பயிர்களுக்கு இனிமேலும் தொடர்ச்சியாக காவிரி நீர் தேவைப்படுகிறது.
தற்போது மேட்டூர் அணை நேற்று மூடப்பட்ட நிலையில் கல்லணைக்கு வரக்கூடிய தண்ணீரைக் கொண்டு தேவைப்படும் பகுதிகளுக்கு சிறிது சிறிதாக பகிர்ந்து அளித்தாலும் அதிகபட்சமாக ஒரு வாரத்துக்கு மட்டுமே தண்ணீர் கிடைக்கும் சூழல் உள்ளது. அதன்பிறகு பயிர்கள் வாடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த ஒரு வார காலத்திலும் மிகக் குறைவான அளவிலேயே நீர் திறக்கப்படும் நிலை இருப்பதால் தேவையான இடங்களுக்கு பரவலாக நீர் கிடைக்காது.
ஆகவே மேட்டூர் அணையில் இருந்து குறைந்தபட்சம் பிப்ரவரி 15-ந்தேதி வரை நீர் திறந்து விட்டால் மட்டுமே பயிர்களை காப்பாற்ற முடியும் என்றார்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/