முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகன் துரை தயாநிதியின் 40 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் கீழவளவில் உள்ள கிரானைட் மலையில் இருந்து, முறைகேடாக கிரானைட் வெட்டி கடத்தியதாக, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மகன் துரை தயாநிதி மீது புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த முறைகேடு காரணமாக தமிழக அரசுக்கு சுமார் 257 கோடி ரூபாய நஷ்டம் ஏற்பட்டதாக வழக்கு பதியப்பட்டு உள்ளது. மொத்தம் 5 பேர் மீது இது தொடர்பாக வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் முறைகேடாக வாங்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரித்து வருகிறது.
இந்த நிலையில் இந்த வழக்கில் தற்போது முதல்முறையாக துரை தயாநிதி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரது 40 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளது. மதுரையில் உள்ள ஒரு அலுவலகம், கார்கள், ஒரு சொகுசு வீடு உள்ளிட்ட பல சொத்துக்கள் இதில் முடக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
அமலாக்கத்துறை அறிக்கை
இதுதொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சட்ட விரோதமாக கிரானைட் குவாரி நடத்தியதற்காக மதுரை மற்றும் சென்னையில் உள்ள 25 நிலங்கள், கட்டிடங்கள், வங்கியில் உள்ள நிரந்தர வைப்புத் தொகை என மொத்தம் ரூ.40.34 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கியுள்ளது. சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பஸ் கிரானைட்ஸ் பிரைவேட் லிமிடட் மீது தமிழக காவல்துறை பதிவு செய்த வழக்கின்படி அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. காவல்துறையின் குற்றப்பத்திரிக்கையானது மேற்கூறிய நிறுவனம் பல்வேறு விதிமுறை மீறல்களில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் பங்குதாரர்கள், இயக்குநர்கள் எஸ்.நாகராஜன், தயாநிதி அழகிரி ஆகியோர் மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் இணைந்து தமிழக அரசின் டாமின் நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தில் சட்டவிரோத சுரங்கப் பணிகள் மேற்கொண்டதோடு அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து அமலாக்கத்துறை தற்காலிகமாக சொத்துகளை முடக்குகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.