இன்று நடைபெற்ற இரண்டாம் நாள் சட்டமன்ற கூட்டத்தொடரில், செல்வப்பெருந்தகை அடுத்த முறையும் சட்டமன்ற உறுப்பினராக தொடர்வது என் கையில் தான் இருக்கிறது எனக் கிண்டல் செய்யும் விதமாக துரைமுருகன் கூறினார். இதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் சிரித்தனர்.
முன்னதாக திருப்புகழ் கமிட்டியின் பரிந்துரைகள் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வபப்பெருந்தகை கோரிக்கை விடுத்தார்
அதன்படி, "கடந்த வாரம் பெய்த மழையால் வரதராஜபுரம் பகுதியில் முல்லை நகர், தனலட்சுமி நகர், பி.டி.சி நகர், அஷ்டலட்சுமி நகர் போன்ற இடங்களில் பெருவெள்ளம் ஏற்பட்டது. அதை அனைத்தையும் ஊடகங்களில் பார்த்திருப்போம்.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அனுபவம் வாய்ந்தவர், எதை எடுத்தாலும் முழுமையாக செய்து முடிக்க கூடியவர், அரை குறையாக செய்யாதவர் என்பதை நாடு அறியும். ஆனால், என் தொகுதியில் வரதராஜபுரம் பகுதியில் அரைகுறையாக வேலை நடந்திருக்கிறது; முழுமையாக நடைபெறவில்லை.
எனினும், முன்பு ஒரு காலத்தில் எல்லாம் மழை வந்தால் வெள்ளம் 10, 20 நாள்கள் தேங்கி நிற்கும். உங்களுடைய முயற்சியால் இப்போது ஒரே நாளில் வெள்ளம் வடிந்து விடுகிறது.
இருந்தாலும் நான் சொன்ன இடங்களில் திருப்புகழ் கமிட்டியின் பரிந்துரை இருக்கிறது. திருப்புகழ் கமிட்டியின் பரிந்துரையை முழுமையாக நிறைவேற்றினால் தான், தண்ணீர் தேங்காத பகுதியாக அதை பார்க்க முடியும். இதற்கு முன்பே அமைச்சர் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார்.
அதில் ஒரத்தூர் ஏரி, படப்பை ஏரி, திருமங்கலம் ஏரியை நீர்த்தேக்கமாக மாற்றினால் இப்பகுதிகளில் தண்ணீர் தேங்காது என்று குறிப்பிட்டிருந்தீர்கள். திருப்புகழ் கமிட்டியின் பரிந்துரையை முதலமைச்சர் நிறைவேற்றுவார் என வாக்குறுதி அளித்திருக்கிறேன்.
எல்லா இடங்களிலும் இருப்பது போல், என் தொகுதியிலும் நெருக்கடி இருக்கிறது. அதன்படி, உத்திரவாதம் கொடுத்திருக்கிறேன். வரும் நிதிநிலை அறிக்கையில் எங்கள் நீர்வளத்துறை அமைச்சர் திருப்புகழ் கமிட்டி பரிந்துரைகளை நிறைவேற்றுவார் எனக் கருதுகிறேன். நான் சட்டமன்ற உறுப்பினராக தொடர்வது அவர் கையில் தான் இருக்கிறது. எனவே, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இதை நிறைவேற்றி தருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறி அமர்ந்தார்.
அப்போது பதிலளிக்கும் விதமாக பேசிய துரைமுருகன், "செல்வப்பெருந்தகை என்னிடம் நன்றாக மாட்டிக் கொண்டார். அவர் சட்டமன்ற உறுப்பினராக தொடர்வது என் கையில் தான் இருக்கிறது" எனக் கிண்டல் செய்யும் விதமாக கூறினார். இதைக் கேட்டு சட்டமன்றத்தில் சிரிப்பலை ஏற்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“