விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போது திமுக அரசு மற்றும் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக சட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார்.
அவரது கைதுக்கு நாம் தமிழர் சீமான், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டு, 3 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் சாட்டை துரைமுருகன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிமன்றத்தில் இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ''சாட்டை துரைமுருகனை கைது செய்ய எந்தவித முகாந்திரமும் இல்லை. அவரை நீதிமன்றக் காவலில் வைக்க தேவையில்லை'' எனக்கூறி விடுவித்தார்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சாட்டை துரைமுருகன், திமுக அரசு தன்னை திட்டமிட்டு கொலை செய்ய பார்த்ததாக குற்றம்சாட்டினார்.
மேலும், பேசிய அவர், ''திமுக அரசாங்கம் என் மீது 11 வழக்குகளை போட்டு முடக்க நினைத்தது. அதேபோல மீண்டும் ஒரு பொய் வழக்கை போட்டு முடக்க நினைத்தது. நீதிமன்றத்தில் எங்கள் வாதங்களை எடுத்து வைத்தோம். அப்பட்டமான பொய் வழக்கு இது. சமூக வலைத்தளங்களில் இருக்கும் பாடலை மேற்கோள் காட்டி தான் நான் பேசினேன்.
வேறு எந்த சமூகத்தையும் நான் இழிவுபடுத்தி பேசவில்லை.
நான் பாடிய பாடல் சமூக வலைத்தளத்தில் இருக்கிறது, அதிமுக கடந்த 31 ஆண்டுகளாக தேர்தல் பிரசாரத்தின் போது பாடும் பாடல் .
சமூக வலைத்தளங்களில் இருக்கின்ற பாடல். இதனை மேற்கோள் காட்டி, தான் நான் பாடினேன். நான் எந்த சமூகத்தையும் இழிவுபடுத்தி பேசவில்லை. குறிப்பாக சண்டாளன் என்கிற சொல் ஒரு சாதிய சொல் என்று எனக்கு தெரியாது. அதனை இன்றைக்கு தான் புரிந்துகொண்டேன்.
ஆனால் அதை பயன்படுத்தி என் மீது வழக்கு போட்டார்கள். நீதியரசர் இந்த வழக்கு செல்லாது என்று என்னை விடுதலை செய்திருக்கிறார்'' என்றார்.
அத்துடன், ''திமுக அரசாங்கம் யாருமே பேசக்கூடாது என்று நினைப்பது அப்பட்டமான அடக்குமுறை. திட்டமிட்டு என்னை காரில் அழைத்து வந்தார்கள். நான் வீடு கட்ட சொந்த ஊருக்கு போயிருந்தேன். வம்படியாக வந்து என் செல்போனை பறித்தார்கள். என் காரிலேயே என்னை அழைத்து சென்றார்கள். அப்போது ஓட்டுநர் முழு போதையில் இருந்தார்.
திட்டமிட்டு திருவில்லிபுத்தூர் அருகே விபத்திற்குள்ளாக்க பார்த்தார்கள். என்னுடைய ஓட்டுநர் பின்னால் இருந்து எச்சரித்தார். என்னை திட்டமிட்டு இந்த அரசாங்கம் கொலை செய்ய பார்த்தது. மதுரை டோல்கேட் பக்கத்தில் காவலர் காரை மற்றொரு கார் மீது மோதினார். அப்போது பின்னால் வந்த லாரி என் கார் மீது மோதியதால் எனக்கும், என் ஓட்டுநருக்கும் அடிபட்டது.
பின்னர் வண்டி உடைந்ததும் என்னை டெம்போவில் ஏற்றி வந்தனர். முழுக்க முழுக்க இந்த அரசு என்னை கொலை செய்ய பார்க்கிறது; எனக்கு பாதுகாப்பு இல்லை. தயவு செய்து நீதிமன்றம் என் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்'' என ஆவேசமாக பேசினார்.
க.சண்முகவடிவேல்