நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர் சந்திப்பின் போது பெரியார் மற்றும் திராவிடம் பற்றி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மேலும், அவருக்கு எதிராக பலரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை, பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியதாக சீமானுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் கண்டனம் தெரிவித்து, அவரது இல்லத்தை முற்றுகையிட்டனர். நா.த.க நிர்வாகி ஒருவரின் கார் கண்ணாடியை உடைத்தனர். இதேபோல், சீமானின் உருவப்படத்தை செருப்பால் அடித்து த.பெ.தி.க அமைப்பு நடத்திய போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
11 மாவட்டங்களில் வழக்குப் பதிவு
இந்நிலையில், பெரியார் குறித்து அவதூறான கருத்தை கூறியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது இதுவரை 11 மாவட்டங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர், சேலம், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்துள்ளனர். சீமான் மீது தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார்கள் குவிந்து வருகின்றன. தற்போது வரை அவர் மீது 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
துரைமுருகன் தாக்கு
இந்த நிலையில், பெரியார் குறித்த அவதூறு கருத்து விவகாரத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானை கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார் அமைச்சர் துரைமுருகன். இது தொடர்பாக, சென்னையில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், "பெரியார் சொல்லாதவற்றையும் சொன்னதாக அபாண்டமாக அவதூறு பரப்புகிறார்கள். தமிழ்நாட்டை ஏன் பெரியார் மண் என்கிறோம் என சில மண்ணாந்தகைகளுக்கு புரிவதில்லை. பெரியாரின் கொள்கைகளே தமிழ்நாட்டை இன்று வழிநடத்துவதால் பெரியார் மண் என்கிறோம். பெரியாரை விமர்சிக்கும் இழிவான, மலிவான அரசியல் பேர்வழிகளை புறக்கணிப்போம்.
அறிவிலிகளின் அவதூறுகளால் பெரியாரின் புகழை மறைக்க முடியாது. யாருக்கோ ஏஜெண்டாக சில தற்குறிகள் இங்கே அரசியல் நடத்திக்கொண்டிருக்கின்றன. மானமும் அறிவும் இருப்போர் பெரியாரை இழிவாக பேச மாட்டார்கள். தமிழ்நாட்டின் அமைதியை குலைக்கலாமா என நினைத்தால் சட்டம் தன் கடைமையை செய்யும்." என்று அவர் கூறியுள்ளார்.