தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் தொகுதிக்கு தேவையான அடிப்படை தேவைகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விகளை முன்வைத்தனர்.
அப்போது, வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் ஓ.எஸ். மணியன், "தமிழ்நாட்டிலேயே, வேதாரண்யம் தொகுதி துளசியாப்பட்டினம் கிராமத்தில் தான் ஔவையாருக்கு கோயில் இருக்கிறது. அங்கு ஆண்டு தோறும் அரசு விழா நடைபெற்று வருகிறது. ரூ. 13 கோடியில் ஔவைக்கு மணிமண்டபம் கட்டும் பணி நடைபெறுகிறது. எனவே, ஔவையின் அறிவுக்களஞ்சியம் அமைக்கும் பணியை அமைச்சர் மறுபரிசீலனை செய்வாரா?" எனக் கேள்வி எழுப்பினார்
இதற்கு பதிலளித்த அமைச்சர் சாமிநாதன் "நிதிநிலைக்கு ஏற்ப முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று இது குறித்து முடிவு எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
அப்போது, "இதில், நிதி இழப்பு அல்லது நிதி தேவை என எதுவும் இல்லை. ரூ. 13 கோடிக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. அதில் புத்தகங்களை வைத்தால் போதுமானதாக இருக்கும். இதில் நிதி பற்றாக்குறை என்ற பிரச்சனையே எழவில்லை. அறம் செய்ய விரும்பு என்ற ஔவையாரின் அனைத்து பாடல்களும் எளிதாக புரிந்து கொள்ள முடிந்தவை. இத்தகைய ஔவையாரின் புத்தகங்களை அங்கே வைக்க வேண்டும் என்பது தான் கோரிக்கை" என ஓ எஸ் மணியன் கூறினார்.
இந்த விவாதத்தில் குறிக்கிட்ட அமைச்சர் துரைமுருகன் "ஔவையார் ஒருவர் அல்ல; ஐந்து பேர் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். அறம் செய்ய விரும்பு என்று பாடுபவர் ஒரு ஔவையார். இதில் எந்த ஔவையாரை சட்டமன்ற உறுப்பினர் குறிப்பிடுகிறார்?" என்று கேள்வி எழுப்பினார்.
இந்தக் கேள்விக்கு "ஒரு காலத்தில் பெண் புலவர்களை ஔவையார் என்று அழைத்தனர்" என ஓ.எஸ். மணியன் பதிலளித்தார். இதன் தொடர்ச்சியாக, "நம் வீட்டில் வயதானவர்களை ஆயா என்று அழைப்பதை போன்று ஔவையார் என்று அழைத்தனரா?" என்று துரைமுருகன் மீண்டும் கேள்வி எழுப்பினார். இதைக் கேட்ட அனைவரும் சிரித்தனர்.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு, "இது வரை ஔவையார் என்று அழைத்தோம். இப்போது தான் அவ்வை யார் என்றே கேள்வி எழுந்துள்ளது. ஔவையார் என்பதை ஒரு குறியீடாக கூட எடுத்துக் கொள்ளலாம். அறிவுக்களஞ்சியம் அமைப்பது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் " எனக் கூறி முற்றுப்புள்ளி விவாதத்திற்கு வைத்தார்.