திமுக பொருளாளராக இருந்த துரைமுருகன், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட உள்ளதால் பொருளாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் துரைமுருகனின் பதவி விலகலை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.
திமுக பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் க.அன்பழகன் மார்ச் 7-ம் தேதி காலமானார். அவருடைய மறைவைத் தொடர்ந்து, திமுகவில் பொதுச்செயலாளர் பதவி காலியானது. இதையடுத்து திமுகவின் பொதுக்குழு வருகிற மார்ச் 29-ம் தேதி கூடி அன்று திமுகவின் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.
திமுகவின் பொருளாளர் பதவி வகிக்கும் துரைமுருகன்
இந்த நிலையில், துரைமுருகன், வருகிற 29-ம் தேதி நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட உள்ளதால் தான் பொருளாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் பொருளாளர் பதவியில் இருந்து விலகுவதை ஏற்பதாகவும் 29-ம் தேதி கூடும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுகவின் பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கடந்த மார்ச் 15-ம் தேதி வெளியிட்ட அறிக்கையின் வாயிலாக மார்ச் 29-ம் தேதி சென்னை
மார்ச் 16-ம் தேதி கடிதத்தின் வாயிலாக கழகப் பொருளாளர் துரைமுருகன் பொதுச்செயலாளர் பொறுப்பிற்கு போட்டியிட விழைவதாகவும் அவர் தமது பொருளாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும் என்னிடம் தெரிவித்துள்ளதை ஏற்றுக்கொள்கிறேன்.
எனவே மார்ச் 29-ம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பொறுப்புகளுக்கான தேர்வு நடைபெறும். பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் மூலம், துரைமுருகன் திமுக பொதுச்செயலாளராவது உறுதியாகி உள்ளது.