திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் பொங்கல் விழா இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் திருச்சி எம்.பி-யும், ம.தி.மு.க முதன்மை செயலாளருமான துரை வைகோ கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "விவசாய இடுப்பொருட்களின் விலை உயர்வு விவசாய பொருட்களுக்கான ஜி.எஸ்.டி செயல்படாத பயிர் காப்பீடு போன்றவற்றால் விவசாயம் அழியும் நிலைக்கு சென்று கொண்டுள்ளது.
குறைந்த பட்ச ஆதரவு விலை திட்டம் இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளது. இன்று சமூகநீதி பெண்கள் உரிமை எல்லாவற்றும் கற்கும் காரணம் தந்தை பெரியார் தான். தமிழகம் இன்று முன்னேற்றம் அடைந்துள்ளது என்றால் அதற்கு ஒரே காரணம் தந்தை பெரியாரின் கொள்கைகள் மட்டும்தான். இன்று பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேறி இருக்கிறார்கள் என்றால் அதற்கு தந்தை பெரியார் தான் காரணம் இதை யாராலும் மறுக்க முடியாது. திராவிட கொள்கைகளுக்கு எதிராக சனாதன கொள்கைகளை கொண்டவர்கள் தான் தந்தை பெரியாரை எதிர்த்து வந்தார்கள்.
இன்று தமிழ் தேசியம் பேசக் கூடியவர்கள் தந்தை பெரியாரை எதிர்ப்பது வேதனையாக விஷயமாக உள்ளது. சமூக நீதிக்கு எதிரான சனாதான அமைப்புகள் செய்யும் விஷயத்தை சீமான் செய்வது வேதனையாக உள்ளது இது சீமானுக்கும் சரி நாம் தமிழர் இயக்கத்திற்கும் சரியானது அல்ல. தந்தை பெரியாருக்கு உண்டான மரியாதையை தமிழக அரசு எப்பொழுதும் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறது. பெரியாரைக் கொச்சைப்படுத்தும் விஷயத்தில் அண்ணாமலைக்கும், சீமானுக்கும் இடையே போட்டி நிலவுகிறது. இது வருத்தத்துடன் கூடிய விஷயமாகும்.
தந்தை பெரியார் இல்லை என்றால் அண்ணாமலையால் ஐ.பி.எஸ் ஆகியிருக்க முடியாது. பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகாரத்திற்கு வந்தது தந்தை பெரியாரின் சமூக நீதி கொள்கையால் தான் இது எல்லாம் தெரிந்து கொண்டே அண்ணாமலை தெரியாதது போல் பேசுகிறார். பொங்கல் பரிசு தொகுப்பில் ஆயிரம் ரூபாய் பணம் வழங்க வேண்டும் என்பது எல்லோருடைய எதிர்பார்ப்பும் தான். ஆனால் புயல் பாதிப்பிற்கு காரணமாக வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு வழங்கவில்லை.
கடுமையான நிதி நெருக்கடி இருப்பதால் தான் பணம் வழங்க முடியாத சூழல் இருந்து வருகிறது. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு கிடைப்பது கிடையாது. வளர்ச்சி திட்டங்களுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய பங்களிப்பை வழங்குவது கிடையாது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனையை அதிகப்படுத்தி இருக்கும் தமிழக அரசின் புதிய சட்டத்தை வரவேற்கிறோம்" என்று துரை வைகோ கூறினார்.
இந்த பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், பெரம்பலூர் எம்பி அருண் நேரு, வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.