காவிரி, 100 நாள் வேலைத் திட்ட விவகாரங்களில் மத்திய அரசைக் கண்டித்து அக்.16-ம் தேதி மதிமுக முதன்மை செயலாளர் தலைமையில், திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
அதன்படி, இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மத்திய அரசை கண்டித்து துரை.வைகோ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக துரை வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது; ‘காவேரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை அனைத்தையும் செய்து விட்டது. காவேரி பிரச்சனை இரு மாநில பிரச்சனை என்பதால் இதில் ஒன்றிய அரசு தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஒன்றிய பா.ஜ.க அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பா.ஜ.க விலிருந்து அ.தி.மு.க விலகியதால் எங்கள் கூட்டணியில் எந்த விரிசலும் ஏற்படாது. எங்கள் கூட்டணியின் இலக்கு மதவாத பா.ஜ.க வை வீழ்த்த வேண்டும் என்பது தான். அதை நோக்கி தான் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.
கடந்த 5 ஆண்டுகளில் அ.தி.மு.க சிறுபான்மை மக்களுக்கு எதிராக என்னென்ன செய்தார்கள் என்பது அவர்களுக்கு தெரியும். அதனால் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பது சிறுபான்மை மக்களுக்கு நன்றாக தெரியும் எனப் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மனதை தமிழ் மாணிக்கம், சேரன், டாக்டர் ரொக்கையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“