திருச்சிக்கு வருகை தந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளருமான துரை வைகோ புதுக்கோட்டைக்கு சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். பின்னர் திருச்சியில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்; முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதியில் 78% நிறைவேற்றி உள்ளார்.
கொரோனா போன்ற இக்கட்டான சூழ்நிலையில் நிதி நெருக்கடியில் பல்வேறு நல்ல திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறம்பட செயல்படுத்தி உள்ளார். குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய் கொடுக்க முடியாது என எதிர்கட்சிகள் கோள்வி எழுப்பினர்! கண்டிப்பாக சாத்தியப்படுத்த முடியாது என்று தீர்க்கமாக வாதம் செய்தனர். ஆனால் 1.7 கோடி குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் பாதிப்பு இது வரை மத்திய அரசு 1 பைசா கூட அளிக்கவில்லை. திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையம் திறக்கப்பட்டாலும், முழுமையான பணிகள் நிறைவு பெற்று அங்கு விமானங்கள் தரையிறங்குவதோ அல்லது செல்வதோ இல்லை. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்த மத்திய அரசு இதுவரை எதனையும் செயல்படுத்தவில்லை.
நகரங்களின் கட்டமைப்புகளை சீரமைக்கவும், புதிய மேம்பாலம், புதிய சாலைகள் அமைக்கவும் மேலும், புதுக்கோட்டை பேருந்து நிறுத்தத்தை விரிவாக்கம் செய்ய பல நல்ல திட்டங்களை கொண்டு வரவிருக்கின்றோம். விவசாயிகள் நலனுக்காக காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தவும், பொன்மலை ரயில்வே பணிமனையில் மெட்ரோ ரயில் தயாரிக்கும் பணி மேற்கொள்ளவும், மத்திய அரசு பணிகளில் வேலை வாய்ப்பை அதிகரிக்க பெல், ரயில்வே உள்ளிட்ட பல்வேறு தொழிலகங்களின் பணிகள் சிறப்பாக நடைபெற நடவடிக்கை மேற்கொள்வோம்.
குடியுரிமை இன்று வரை இலங்கை தமிழர்களுக்கு இல்லை. சி.எ.ஏ சட்டம் ரத்து செய்யப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
எங்களைப் பொருத்தவரை ராகுல் காந்தி தான் இந்தியா கூட்டணியின் பிரதமர். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை உறுதியாக செயல்படுத்துவேன். எதை என்னால் நிறைவேற்ற முடியுமோ அதை மட்டுமே வாக்குறுதியாக அளிப்பேன்.
நான் எல்லா ஊருக்கும் பொதுவானவன், தமிழக மக்கள் அனைவருக்கும் கடமைப்பட்டவன். எங்களுக்கு 3 சீட்டு கிடைத்திருந்தால் நான் வேறு எங்காவது நிற்க வாய்ப்பு இருந்திருக்கும், ஒரு சீட்டு கிடைத்ததால் திருச்சியில் நிற்கிறேன். அமைச்சர்களைக்கொண்டு மக்களுக்கு தேவையான நல்ல திட்டங்களை கொண்டு வருவேன்.
நான் ஐ.டி.சி. விநியோகஸ்தராக கடந்த 2000-ம் முதல் 2016-ம் ஆண்டு வரை இருந்தேன். மதுவை எதிர்த்து வைகோ போராடி வரும் நிலையில் அவரது மகன் எப்படி புகையிலையை விற்க அனுமதிக்க முடியும் என அனைவரும் கேட்டதால் நான் அந்த பதவி, பொறுப்புகளில் இருந்து முற்றிலும் விலகி விட்டேன். நான் ராஜினாமா செய்து 7 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இந்தியா முழுவதும் பாஜகவை எதிர்க்கும் இயக்கங்கள் மீது ஐ.டி., ஈடி சோதனை நடைபெற்று வருகின்றது.
அமைச்சர் பொன்முடி விவகாரத்தில் ஆளுநருக்கு உச்சநீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்திருப்பது குறித்த கேள்விக்கு, மாநில உரிமைகளில் தலையிட ஆளுநருக்கு உரிமை இல்லை.
இந்திய அரசியலமைப்பு சட்டம் முதலமைச்சர் என்ன முடிவு செய்கிறாரோ அதற்கு ஆளுநர் ஒத்து போக வேண்டும் என்று தான் கூறுகிறது. தமிழக ஆளுநர் தனக்கு ஏதோ வானளாவிய பதவி கிடைத்து விட்டதாக எண்ணி கொண்டு உள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கைக்கூலி என்று நான் தொடர்ந்து பேசி வருகிறேன் என்றார்.
இந்த சந்திப்பின்போது ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர்கள் தி.மு.இராஜேந்திரன், டாக்டர் ரொஹையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம், சேரன் உள்ளிட்ட மதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.