scorecardresearch

உதயநிதி துணை முதல்வர் ஆனாலும் வரவேற்போம் – துரை வைகோ

வாரிசு அரசியலில் எந்த தவறும் இல்லை. திறமை உள்ளவர்கள் அரசியலுக்கு வருகின்றனர். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதில் எந்த தவறும் இல்லை – துரை வைகோ

உதயநிதி துணை முதல்வர் ஆனாலும் வரவேற்போம் – துரை வைகோ

துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டாலும் வரவேற்போம் என ம.தி.மு.க தலைமை கழகச் செயலாளரும், வைகோவின் மகனுமாகிய துரை வைகோ கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலினின் மகனும், தி.மு.க இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்ட பேரவை தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டார்.

இதையும் படியுங்கள்: தேர்தல் பாதையை கைவிட்டாலும் கொள்கைப் பாதையை கைவிட மாட்டோம்: திருச்சியில் திருமாவளவன் பேச்சு

அந்த தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று தி.மு.க ஆட்சி அமைத்த நிலையில், உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என அனைவராலும் எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இதையடுத்து உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்தநிலையில், தி.மு.க ஆட்சி அமைத்து கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது வாரிசு அரசியல் என எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இந்தநிலையில், உதயநிதி துணை முதல்வரானாலும் வரவேற்போம் என துரை வைகோ கூறியுள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க தலைமை அலுவலகத்தில் மாணவர் அணி மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இதில் தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ, துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் சமூக ஊடகங்கள் வழியாக கட்சியின் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். மாநில ஆளுநர் பதவி நீக்கப்பட வேண்டும். ஐ.ஐ.டி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனப் பணி இடங்களில் பட்டியல் இனத்தவருக்கான இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த துரை வைகோ, ஆளுநர் பதவி தேவையற்ற ஒன்று. தாங்கள் ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநரை கொண்டு, மத்திய அரசு இடையூறு செய்கின்றது. மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் ஆளுநர் பதவிகளை நீக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலுக்கு ம.தி.மு.க தயாராகி வருகிறது. இந்த தேர்தலிலும் தி.மு.க.,வுடன் எங்கள் கூட்டணி தொடரும்.

வாரிசு அரசியலில் எந்த தவறும் இல்லை. திறமை உள்ளவர்கள் அரசியலுக்கு வருகின்றனர். எனவே, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதில் எந்த தவறும் இல்லை. அடுத்து உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டாலும் அதையும் வரவேற்போம், என்று துரை வைகோ கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Durai vaiko says mdmk welcomes even udhaynidhi stalin appointed as deputy cm