சட்டமன்ற விழாவுக்கு முறைப்படி அழைத்தும் அதிமுக பங்கேற்கவில்லை – துரைமுருகன் அதிருப்தி

Duraimurugan comments on ADMK boycott tamilnadu assembly centenary function: ஆளுநர் இருக்கைக்கு அருகில் அமர இடம் ஒதுக்கியும் எடப்பாடியார் கலந்துக்கொள்ளவில்லை; கருணாநிதி படதிறப்பு விழாவில் அதிமுக கலந்துக் கொள்ளாதது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்திய துரைமுருகன்

தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் சட்டமன்றத்தில் கருணாநிதி படத்திறப்பு விழாவை அதிமுக புறக்கணித்தது குறித்து அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளார் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்.

தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவும் மற்றும் சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திறப்பு விழாவும் நேற்று (ஆகஸ்ட் 2) நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருப் படத்தை திறந்து வைத்து, கருணாநிதிக்கும் தமிழக சட்டமன்றத்திற்கும் புகழுரையாற்றினார்.

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற விழாவிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் அனைத்துக் கட்சிகளின் முக்கிய பிரமுகர்களும் கலந்துக் கொண்டனர்.

கட்சி பேதமின்றி அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும் இந்த விழாவில் கலந்துக் கொண்டனர். ஆனால், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நூற்றாண்டு விழாவை பிரதான எதிர்க்கட்சியான அதிமுக புறக்கணித்தது.

விழாவிற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சரும் முன்னாள் சபாநாயகருமான ஜெயக்குமார், சட்டமன்றத்தில் கருணாநிதி படத்திறப்பு விழாவை அதிமுக புறக்கணிப்பதாக கூறினார். மேலும், சட்டபேரவை வரலாற்றி மாற்றி எழுதி திமுக விழா கொண்டாடுகிறது. ஜெயலலிதா படத்திறப்பு விழாவை திமுக புறக்கணித்த நிலையில், கருணாநிதி படத்திறப்பில் நாங்கள் எப்படி கலந்துக் கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், இன்று திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் கருணாநிதி படத்திறப்பு விழாவை அதிமுக புறக்கணித்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த துரைமுருகன், “ஒரு கட்சி கலந்துக் கொள்வதும் கலந்துக் கொள்ளாததும் அவர்கள் விருப்பம். ஜெயலலிதா படத்திறப்பு விழாவில் திமுக கலந்துக் கொள்ளவில்லை என்று கூறுகின்றனர். முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதாவின் படத்திறப்பு விழாக்கு அவர்கள் அழைப்பிதழ் மட்டுமே கொடுத்தனர். ஆனால் நாங்கள் அப்படி செய்யவில்லை. இந்த விழா திட்டமிடலின்போதே, முதல்வர் ஸ்டாலின் என்னை அழைத்து, `இந்த விழாவை எதிர்க்கட்சிகளின் தோழமையோடும், அனுசரனையோடும் நடத்தப்பட வேண்டும். எனவே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை அழைத்துப்பேசி இந்த விழாவில் கலந்துகொள்ளச் செய்யவேண்டும்” எனக் கூறினார்.

மேலும், `அவருக்கு குடியரசுத்தலைவர். ஆளுநர், சபாநாயகர் அமர்ந்திருக்கும் வரிசையில் அவர்களுக்கு அருகிலே இருக்கை ஒதுக்கப்பட்டு, வாழ்த்துரை வழங்கவும் வாய்ப்பளிக்கவேண்டும்’ என்றும் அறிவுறுத்தினார்.

முதல்வரின் அறிவுறுத்தலின்படி எடப்பாடி பழனிசாமியை நானே தொலைபேசியில் அழைத்துப்பேசினேன். ஆனால், கலந்தாலோசித்துவிட்டு முடிவு சொல்கிறேன் என்று கூறிய எடப்பாடி பழனிச்சாமி, என்னிடம் பதில் தெரிவிக்காமல், சட்டமன்ற செயலாளரிடம் நாங்கள் விழாவில் கலந்துகொள்ள மாட்டோம் என தெரிவித்துவிட்டார். ஜெயலலிதா படத்திறப்பு விழாவில், அப்போது எதிர்கட்சியாக இருந்த எங்களுக்கு உரிய மரியாதை இல்லை என்பதால் கலந்துக் கொள்ளவில்லை. ஆனால் நாங்கள் உரிய மரியாதையை அளிப்போம் என்று கூறினோம்” என்று துரைமுருகன் தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Duraimurugan comments on admk boycott tamilnadu assembly centenary function

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express